நடிகர்களின் சமூக நற்பணி!   




மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் தனது கண்களை தானம் செய்ததன் மூலமாகதனது மறைவிற்கு பின்னரும் பார்வையிழந்த நான்கு பேர்களுக்கு பார்வை கிடைக்கச் செய்துள்ளார்.

அவரை பின்பற்றி அவரது ரசிகர்கள் சுமார் 6500 பேர்கள் தங்களுடைய கண்களையும் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். இது அங்கு ஒரு மாதத்தில் பதிவாகும் கண் தான எண்ணிக்கையைவிட சுமார் 600 மடங்கு அதிகம் என்று கர்னாடக மாநில உடலுறுப்பு தான வங்கி தெரிவித்துள்ளது. [தொலைக்காட்சி செய்தி] 

திரையில் நடித்தாலும் நிஜத்தில் தான் வாழ்ந்த காலத்தில் தனது செயற்கரிய மக்கள்நலன் சார்ந்த செயல்பாடுகளினால் ஒருநடிகர் இப்படித்தான் ஒளிர வேண்டும். 

இது போன்ற சமூக நற்பணிகளே ஒரு நடிகரின் சமூக மேம்பாட்டிற்கு கிடைக்கப்பெற்ற வெற்றியாக அமையுமேயல்லாது திரைப்பட நடிப்பின் மூலம் ஜாதி தொடர்புடைய காட்சிகளை தேவையின்றி புகுத்தி அதன்மூலம் பிரச்சனைகளை உருவாக்கி  தனது திரைப்படத்திற்கு அதிக விளம்பரத்தை ஏற்படுத்தி மேலும் லாபங்களை குவித்து கொண்டு தானும் சமூக அக்கறையுள்ளவன்தான் என்று மக்களை திசை திருப்புவது அல்ல.

சூர்யா போன்ற நடிகர்கள் ஒருபுறம் அறக்கட்டளைகள் வாயிலாக மாணவர்களுக்கு கல்வியில் உதவுதல் என்பதாக அரங்கத்தில் வெளிப்படுத்திக்கொண்டு மறுபுறம் தனது திரைப்படங்களில் ஜாதி பிரச்சனைகள் ஏற்படும் வண்ணம் காட்சிகளை புகுத்தி அமைதியான சமூகத்தில் போராட்டங்கள் வன்முறைகள் ஏற்பட காரணகர்தாக்களாக ஆகி வருவது உண்மையான சமூக அக்கறையல்ல.

தனது ஒரு திரைப்படத்தின் மூலம் அமைதியாக இருக்கும் சமூகத்தில் பிரச்சனைகள் போராட்டங்கள் வன்முறைகள் ஏற்பட காரணமாக அமைவதுதான் சமூக அக்கறையா?

அப்படி சமூகத்தில் பிரச்சனை ஏற்படும்படியாக காட்சிகளை அமைத்துக்கொண்டு அதன்மூலம் படத்தை பூதாகாரமாக விளம்பரப்படுத்தி வெற்றி கண்டு கோடிகளை மேலும் குவித்துக்கொள்வது என்பது  சமுக அக்கறை கொள்வதாக கூறிக்கொள்ளும் நடிகருக்கு அழகல்ல.

மேலே குறிப்பிட்ட மறைந்த கன்னட நடிகர் இவ்வாறான படைப்புகளை ஏற்படுத்தி தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவில்லையே.

தனது நிஜவாழ்வில் தான் உயிருடன் இருந்த காலகட்டங்களில் அவர் செய்துள்ள விளம்பரமில்லா மக்கள்நலம் சார்ந்த செயல்பாடுகளில் பத்தில் இரண்டினையாவது இங்குள்ள இப்போதைய தமிழ் நடிகர்கள் செய்துள்ளார்களா?

புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பின்னரே அவர் செய்துள்ள செயற்கரிய  மக்கள்நலன் சார்ந்த விஷயங்கள் வெளியுலகிற்கு தெரிய வந்தன.    ஆனால் சூர்யா போன்ற நடிகர்கள் அறக்கட்டளை  ஏற்படுத்தி அதன்மூலம் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிதியுதவிகள் கிடைக்கப்பெற்று சமூகத்தில் மாணவர்களுக்கு உதவுகிறேன் என்பதாக அதிக விளம்பரங்களை ஏற்படுத்திக்கொண்டு ஏதோ புனிதராக தன்னை உருவாக்கப்படுத்திக் கொள்வதைத்தான் இங்கு நம்மால் காணமுடிகிறது.

ஏன் தனது ஒவ்வொரு படத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வருவாயில் நான்கில் ஒரு பங்கினையாவது  மக்கள்நலனிற்காக செலவழிக்கிறேன் என குறைந்தபட்சம் அறிவிக்கவாவது இவர்களால் முடிகிறதா என்றால் அதுதான் இல்லை.  ஆனால் சுய விளம்பரத்திற்கு மட்டும் வான் உயர பேராசை உள்ளது. 

எவ்வித விளம்பரமில்லாமல் சத்தமில்லாமல் சமூக நலன் சார்ந்த யுத்தத்தினை மறைந்த புனித் ராஜ்குமார் செய்துள்ளார்.  இதுதான் உண்மையான சமூக அக்கறை.

இனியாவது சூர்யா போன்ற தமிழ் நடிகர்கள் தங்களது திரைப்படங்கள்  மூலம் ஜாதி சமயம் போன்றவற்றில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு காட்சிகளை அமைத்துக்கொண்டு மறைந்த புனித் ராஜ்குமார் போன்று விளம்பமில்லாமல் மக்களுக்கு உதவிட முன் வரவேண்டும்.   அதுதான் ஒரு சிறந்த நடிகருக்கு அழகாக இருக்கமுடியும்.

ஆர்.கோவிந்தராஜ்