ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் சசிகலாவிடம் கைமாறுகிறது!ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், கடந்த அதிமுக அரசு நினைவு இல்லமாக மாற்றியது. இதற்கு இழப்பீடாக 67 கோடியே 90 லட்ச ரூபாயை வாரிசுதாரர்களான ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோருக்கு வழங்குவதாக அறிவித்தது. இதற்கு முன் ஜெயலலிதாவிற்கு வாரிசுதாரர்கள் யார் என்ற கேள்வி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதியரசர் கிருபாகரன் பென்ஞ் தீபா, தீபக் ஆகிய இருவரையும் வாரிசுதாரர்களாக தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் நினைவு இல்லமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் வாரிசுதாரர்கள் என்ற அடிப்படையில் தீபா மற்றும் தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு இழப்பீடு தொகையை ரத்து செய்யவேண்டும் என்றும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தை வாரிசுதார்களான எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷாத்திரி வழங்கினார். அந்த தீர்ப்பில் ஜெயலலிதா போயஸ்கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கிய ரத்து செய்ததுடன் 67 லட்சத்து 90 லட்ச ரூபாயை அரசிடமே திருப்பி வழங்க வேண்டும் என்றும் அதிரடி தீர்ப்பை வழங்கினார். மேலும் இந்த ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை (வேதா இல்லம்) வாரிசுதாரர்களான தீபா, தீபக் இருவரிடம் ஒப்படைக்க வேண்டும்-. வேதா நிலைய சாவியை 3 வாரத்தில் மனுதாரரிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவுட்டு அதிரடி தீர்ப்பை வழங்கினார்.           


அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கு ஆட்சேபனை எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவிற்கு வேதா நிலையம் மற்றும் பீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடம் எதற்கு என்று நீதிபதி கேள்வி எழுப்பியதோடு கடந்த அதிமுக ஆட்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடைமையாக்கி நினைவிடமாக உருவாக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியதை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இப்பொழுது போயஸ்கார்டன் விரைவில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகள் தீபக் ஆகிய இருவருக்கும் சொந்தமாகிவிட்டது. 


ஆனால் இந்த இருவரும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டால் மீண்டும் போயஸ்கார்டன் ஜெயலலிதா வாழ்ந்த வேதாநிலையம் சசிகலாவின் அதிகாரபூர்வமாக இல்லமாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஏற்கனவே போயஸ்கார்டன் இல்லத்திற்கு ஈடாக சசிகலா ஒரு பிரமாண்ட வீட்டையும் கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது சசிகலாவின் கை ஓங்கி இருக்கிறது என்பதற்கு அடையாளமாக இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. தீபாவும், தீபக்கும் ஏற்கனவே தங்கள் இல்லங்களில் குடியிருந்து வரும் நிலையில் போயஸ்கார்டன் இல்லத்தில் குடியேறுவார்களா என்பது கேள்வியாக உள்ளது. அப்படியே சில காலம் அவர்கள் அங்கு குடியிருந்தாலும் அந்த இல்லத்தின் உரிமையாளராக அவர்கள் இருக்கமாட்டார்கள். யாரோ ஒருவர் பெயரில் அந்த இல்லம் விலைக்கு வாங்கப்பட்டிருக்கும். பின்னாளில் அது சசிகலாவின் வசம் செல்வதற்கே அதிக வாய்ப்பு ஏற்படும்.


பெங்களூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி மத்திய அரசு வருமான வரி ஜெயலலிதாவின் சொத்துக்களை தன் வசம்படுத்தி சீல் வைத்திருந்தாலும் உரிய தொகையினை செலுத்திவிட்டால் திரும்பவும் அந்த சொத்தை விடுவித்துவிடுவார்கள். அதன் பிறகு அந்த சொத்து அனைத்துமே வாரிசுதாரர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு அது மீண்டும் ஒருவருடைய வசம் சென்றுவிடுவதற்கான வாய்ப்புகளும் ஏற்படலாம். ஏற்கனவே ஐதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின் பண்ணைவீடும், திராட்சை தோட்டமும் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. 


எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த பொழுது இந்த இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்தாரே தவிர அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தது ஏன் என்பதும் அதன் பின்னணி திரை மறைவில் நடைபெற்ற விஷயம் என்ன என்பதையும் தற்பொழுது பல சந்தேகங்களையும் ஊகங்களையும் தோற்றுவிக்கிறது. ஆட்சி  மாற்றம் சசிகலாவிற்கு சாதகமாக அமைந்துவிட்டது. 

-டெல்லிகுருஜி