சசிகலா அரசியல் பயணம் 
எதிர்பார்த்த பலனை தரவில்லை!
தலைவர்களுக்கு எதிர்பாராத
கலக்கத்தை தந்துள்ளது!            



சசிகலா தனது அரசியல் பயணத்தை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை தினத்திலிருந்து தொடங்கியிருக்கிறார். டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கி மதுரை சென்று முக்குலோத்தோர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். எதிர்பார்த்த அளவிற்கு பயண திட்டம் பெரிய அளவில் வரவேற்பையும் மக்கள் ஆதரவையும் பெறவில்லையென்றாலும் அதிமுக கொடியையும் ஜெயலலிதா பயன்படுத்திய பிரச்சார வாகனத்தையும் எடுத்துக் கொண்டு காவல் துறையின் அனுமதியும் பெற்று தனது பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார். ஜெயலலிதாவை போல் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் சசிகலா போகும் இடமெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் ஐநூறு ரூபாய் நோட்டு இரண்டாயிரம் நோட்டுகளை வழங்குவதும், குழந்தைகளுக்கு பேர் சூட்டுவதும், ஜெயலலிதா பாணியில் கை அசைத்து மகிழ்வதும், குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் சாக்லெட் கொடுப்பதும் தனது பயணத்தின் முக்கிய நிகழ்வாக வெளிப்படுத்தி வருகிறார். உடனிருந்து பயண ஏற்பாட்டினை கவனித்து வரும் அவரது உறவினர்களான டாக்டர் வெங்கடேஷ் இளவரசியின் மகன் விவேக் ஆகியோரும் சசிகலாவுடன் பயணம் செய்கிறார்கள். சாதி, மதம், மொழி, இனம் இவைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கமான அதிமுக ஒரு சாதியின் கையில் சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் அதிமுக தொண்டர்களும் அதிமுக முக்கிய பிரமுகர்களும் கருதுகிறார்கள்.


குறிப்பாக அதிமுக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனக்கு எதிராக ஆளுங்கட்சி ஆதரவுடன் சசிகலா அரசியல் நடத்துகிறார் என்று அது எப்படி முறியடிப்பது என்றும் ஆலோசித்து வருகிறார்.  குறிப்பாக வேலுமணி தங்கமணி இருவரும் எங்கள் கையில் இருந்த “மணி” செலவு செய்து சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்ய விரும்பாதவர்களை போல் ஒதுங்கியிருப்பதாக எடப்பாடி ஆதரவாளர்களான மாற்றும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கணக்கு போடுகிறார்கள். குறிப்பாக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் நலன் கருதி தொண்டர்களின் விருப்பத்தை புரிந்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பகிரங்கமாக அறிக்கை வெளியிடுவதும் செய்தியாளர்களை சந்திப்பதும் நடைபெற்று வருகிறது.


அதே போல் சி-.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோரும் எடப்பாடிக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் எழுப்பு வருகிறார்கள். இன்னொரு புறம் எடப்பாடிக்கு எதிராக தேவர் சமுதாய மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டி எடப்பாடிக்கு எதிராக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஒ.பன்னீர்செல்வம் தனக்கு ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் பட்சத்தில் சசிகலாவோடும், டிடிவி தினகரனுடனும் எந்த நேரமும் சமரசம் செய்து கொள்வதற்கு தயாராக இருப்பது போல் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். மேலும் தனது ஆதரவாளர்களான ஜே.சி.டி.பிரபாகரன் மற்றும் சிலரை வைத்து சசிகலாவின் ஆதரவு நிலைக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். சசிகலாவின் சுற்றுப்பயணம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முக்குலோத்தோர் (தேவர் சமுதாய) மக்கள் வெளிப்படுத்தும் பொ-ழுதும் அதை கண்டும் காணாமலும் மௌனம் சாதித்து வருகிறார் ஒ.பன்னீர்செல்வம். இந்த நிலையில் அதிமுகவின் எதிர்காலம் அதன் நிர்வாகமும் சசிகலாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றால் மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டு வரலாம் என்று சிலர் கணக்குப் போட்டு திட்டமிட்டு சசிகலாவிற்கு ஆதரவு நிலையையும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு நிலையையும் கட்சிக்குள்ளேயே இருந்து எடுத்து வருகிறார்கள். சசிகலாவின் கை ஓங்கினாலும் அதன் மூலம் ஒ.பன்னீர்செல்வம் பலனை பெறலாம் என்று காத்திருக்கிறார். அதே போல் சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ அதிமுகவிற்குள் நுழைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு அரசியலை தீவிரமாக எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. மொத்தத்தில் அதிமுக இயக்கத்திற்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மிகப் பெரிய சோதனையான காலக்கட்டம். சிலருக்கு ஏற்பட்டுள்ள பதவி ஆசைகளால் செயற்கையான நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட அதிமுக பிளவுப்படுமா? அல்லது ஒற்றுமையான இருந்து ஆளுங்கட்சியான திமுகவை எதிர்த்து அரசியல் செய்யுமா?  என்பது கேள்வி குறியாகுமா?


- டெல்லிகுருஜி