விவசாயிகளின் போராட்டமும்
            பிரதமர் மோடியின் பாராமுகமும் ஏன்?                 

கடந்த பல மாதங்களாக வேளாண் சட்டத்தில் மூன்று சரத்துகளை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் 300 நாட்களை கடந்து போராடி வருகிறார்கள். மத்திய அரசாங்கம் பலமுறை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் பங்கேற்ற விவசாயிகள், பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமே தவிர உங்கள் ஆலோசனைகளை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று பிடிவாதமாக உறுதியாக தங்கள் கருத்துக்களை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியுள்ளார்கள். மத்திய அரசோ விவசாயிகளுடைய அச்சத்தை போக்குகின்ற வகையில் பல வழிகளில் வாக்குறுதிகளை வழங்கினாலும் வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெறுவதோ திருத்தம் செய்வதோ இயலாத காரியம் என்று கூறுகின்றது. மேலும் விவசாயிகளின் போர்வையில் மூன்றாம் தர மனிதர்கள் ஒலிந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஹரியானா, உத்திரப்பிரதேசம், சத்திஸ்கர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் முகாம் இட்டு போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற ஒரு துயர சம்பவம் உலகையே உலுக்கி கொண்டிருக்கிறது. விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியும் மத்திய அரசு மீது கடும் கோபமும் தோன்றியுள்ளது. ஆனால் விவசாயிகள் மத்தியில் காரை ஏற்றி ஒன்பது உயிர்கள் பலியான பிறகும் பிரதமரும் உள்துறை அமைச்சரும் அது சம்பந்தமாக மௌனமாக இருப்பது இந்த ஆட்சியின் மீதும், பிரதமர் மீதும் உள்ள நம்பகத்தன்மைக்கு கேள்விக்குறியாகிறது. சம்பவம் குறித்து தொலைக்காட்சி மற்றும் பிரிண்ட், மீடியாக்கள், பத்திரிகைகள் மூலம் வெளியிடப்பட்ட துயர செய்திகளை கண்டறிந்து தானாக முன்வந்து இந்த வழக்கை உச்சநீதிமன்றம் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.


சம்பவம் நடைபெற்ற மாநில முதல்வர் யோகி ஆதித்தனார் விவசாயிகளின் கூட்டத்தில் வாகனத்தை மோதி  உயிர்பலி வாங்கியவர்கள் மீது உரிய விசாரணை நடைபெறும் என்று கூறுகிறார். எதற்கெடுத்தாலும் டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என்று கூறி வரும் தமிழ்நாடு விவசாயிகள் இந்த சம்பவம் குறித்து வாய் திறக்காமல் இருப்பதும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பமால் இருப்பதும், அப்படியே ஒரு சிலர் குரல் எழுப்பினாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித பயனும் அளிக்கப்போவதில்லை. ஏன் தமிழ்நாட்டு விவசாயிகள் ஐய்யாக்கண்ணு தலைமையில் ஆடையற்ற போராட்டம் நடத்திக் கூட பிரதமர் அலுவலகமோ பிரமரோ தமிழ்நாட்டு விவசாயிகளை அலட்சியம் படுத்தினார்களே தவிர அவர்கள் கோரிக்கையை ஏற்காமல் மௌனம் சாதித்தார்கள் என்பது கடந்த கால நிகழ்வு. ஆனால் தமிழக அரசோ தமிழ்நாட்டின் விவசாயிகளோ வேளாண் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு விவசாயிகள் பிரச்சனையில் மௌனம் சாதிக்கிறது.


காங்கிரஸ் கட்சி விவசாயிகள் பிரச்சனையை கையில் எடுத்து அகில இந்திய அளவில் போராட்டம் நடத்துகிறது. ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி எத்தகைய போராட்டமும் நடத்தாமல் அமைதிகாத்து அடக்கி வாசிக்கிறது. தமிழக ஊடகங்களும் ஒருநாள் கூத்துக்கு மீசை வைத்ததுபோல் ஒருமணி நேர விவாதத்தோடு நிறுத்திக் கொண்டது. இத்தகைய நிகழ்வுகள் விவசாயிகள் தமிழக விவசாயிகளின் மத்தியில் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் பொதுமக்களுக்கும் கவலை அளிக்கிறது. பிரதமர் அவர்களும் மத்திய அரசும் விரைவில் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை எட்டும் வகையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்கள் விரும்புகின்ற பிரச்சனையை வேளாண் சட்டத்தில் இருந்து விலக்கு அளித்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றவேண்டும் என்று அனைத்து தரப்பு பொதுமக்களும் தங்கள் விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த போராட்டம் மேலும் தொடர்ந்தால் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயமும் ஏற்படலாம். பிரதமர் அவர்கள் நேரடியாக தலையிட்டு விவசாயிகள் போராட்டத்திற்கு முடிவு கட்டவேண்டும் என்பது அனைவரது விருப்பமும் ஆகும்.