நூற்றாண்டு நாயகன்: சட்டப்பேரவையில்
துரைமுருகனை பாராட்டி தீர்மானம்சட்டசபையில் இன்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து அவை முன்னவர் துரைமுருகனை பாராட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகிய இரண்டும் இந்தப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றின்மீது ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்று, 2 அறிக்கைகளும் பேரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றன. அதைத்தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் இன்று முதல் தாக்கல் செய்யப்பட உள்ளன.


முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கையை இங்கே அந்தத் துறையினுடைய அமைச்சர் தாக்கல் செய்யவிருக்கிறார். அதைத்தொடர்ந்து இங்கே விவாதங்கள் நடைபெற இருக்கின்றன.

முதல் மானியக் கோரிக்கையாக நீர்வளத்துறை மானியக் கோரிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் துறையினுடைய அமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடியவர் தி.மு.க. பொதுச் செயலாளராகவும், இந்த அவையினுடைய முன்னவராகவும் இருக்கும், துரைமுருகனுடைய துறையின் மானியக் கோரிக்கை இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்த அவையிலே முதன்முதலில் இந்தத் துறையினுடைய மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுவது மகிழ்ச்சிக்குரியது, பெருமைக்குரியது. அதற்காக என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நூறாண்டு வரலாறு கொண்டிருக்கக்கூடிய இந்தச் சட்டப்பேரவைக்கு, அரை நூற்றாண்டுக்கும் முன் வந்தவர்தான் இங்கே அமைச்சராக இருக்கக்கூடிய துரைமுருகன்.

50 ஆண்டுகளாக இந்த அவை நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கக்கூடியவர். அவர் இந்த மன்றத்தை அலங்கரித்துக் கொண்டு இருக்கக் கூடியவர்களில் முக்கிய உறுப்பினராக, மூத்த உறுப்பினராக இருக்கக் கூடியவர்தான் நம்முடைய அமைச்சர் துரைமுருகன். அதனால்தான் அவர் இந்த அவையினுடைய முன்னவராக இருந்து வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டுமென்று சொன்னால் தலைவர் கலைஞரும், இனமான பேராசிரியரும் மறைந்த பிறகு ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு எனக்கு வழிகாட்டியாக இருந்து கொண்டு இருக்கக்கூடியவர்தான் துரைமுருகன்.

அவர் அடிக்கடி பொதுக்கூட்டங்களில், பல நிகழ்ச்சிகளில் ஒன்றைச் சுட்டிக் காட்டுவார். என்னைப் பற்றிச் சொல்கிற போதெல்லாம், ‘இளம் வயது பையனாக நான் ஸ்டாலினை பார்த்து இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். இதனை அவர் பல மேடைகளில் சொல்லி இருக்கிறார்.

‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வேலூர் பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றுகின்றபோது ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன். என்னை இளைஞராக பார்த்ததாக அடிக்கடி அண்ணன் சொல்வார்; நான் அவரை, கலைஞர் இடத்தில், பேராசிரியர் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன். அதுதான் உண்மை, அதை நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எதுவாக இருந்தாலும் மனதில் எதையும் வைத்துக்கொள்ளமாட்டார். மனதில் பட்டதை அப்படியே எடுத்துச் சொல்லி, கட்சிக்கும், ஆட்சிக்கும் துணையாக இருக்கக் கூடியவர்.

அவருடைய ஊர் பெயர் என்னவென்று கேட்டீர்கள் என்றால் கே.வி.குப்பம். கே.வி.குப்பம் என்பது ஒரு காலத்தில் ‘கீழ்வழி துணையான் குப்பம்’ என்று அழைக்கப்பட்ட ஊராகும். அப்படி எனக்கு வழித்துணையாக இருப்பவர்தான் நம்முடைய அருமை அண்ணன் துரைமுருகன். அப்படித்தான் தலைவர் கலைஞருக்கும் அவர் வழித்துணையாக இருந்திருக்கிறார்.

கலைஞர் எப்போதுமே துரைமுருகனை ‘துரை, துரை, துரை’ என்றுதான் பாசமாக அழைப்பார். அவரோடு இனிமையாக பேசுவார், பழகுவார். இரண்டு பேரும் பேச ஆரம்பித்தால், மணிக்கணக்கில், நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.

உண்மையை சொல்லப்போனால், எங்களுக்கெல்லாம்கூட பொறாமை ஏற்படும். தலைவர் இவரிடம் மட்டும் இவ்வளவு சகஜமாக பேசுகிறாரே, என்றெல்லாம்கூட நாங்கள் நினைப்பது உண்டு.

என்றைக்காவது ஒரு நாள் துரைமுருகன், தலைவருடைய வீட்டிற்கு வரவில்லையென்றால், இல்லை கொஞ்சம் தாமதமானால், உடனே போன் செய்து, துரைமுருகன் எங்கே இருக்கின்றார் என்று பாருங்கள் என்று சொல்லி அவரை வரச்சொல்லுவார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 2007-ம் ஆண்டு அவரது உடல்நலம் கொஞ்சம் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.

அப்போது கலைஞருடைய உள்ளம் எந்த அளவிற்குத் துடித்தது என்பதை நான் பக்கத்தில் இருந்து பார்த்தவன். மறுநாள் காலை துரைமுருகனுக்கு அறுவை சிகிச்சை நடக்கப்போகிறது.

அதற்கு முதல்நாள் இரவு துரைமுருகனுக்கு போன் செய்து “என்ன துரை, தூங்கிட்டியா?’ அப்படியென்று கேட்கிறார். ‘இல்லை அண்ணா, இன்னும் நான் தூங்கவில்லை’ என்கிறார். ‘காலையில் ஆபரே‌ஷன் அதை நினைத்து பயந்து கொண்டு இருக்கிறாயா?’ என்று கேட்டார் தலைவர். ‘இல்லை அண்ணா, இல்லை அண்ணா’ என்று இவர் சமாளித்தார்.

உன்னைப்பற்றி எனக்குத் தெரியும்பா, நானே மருத்துவமனைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, அங்கே போய் இரவு முழுவதும் மருத்துவமனையிலே உட்கார்ந்துவிட்டு, காலையில்தான் வீடு திரும்பினார் கலைஞர்.

அந்தப் பாசத்தைதான் நான் பெருமையோடு சொல்கிறேன். பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல, ‘ஒரு தாய் வயிற்றில் பிறக்க வயிறு தாங்காது என்ற காரணத்தால், தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் நாம்’ என்பதை இந்தச் பாசமும், நெகிழ்ச்சியும்தான் நமக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த அளவிற்கு கலைஞருடைய அன்பைப் பெற்றவர் துரைமுருகன்.

கலைஞருடைய பக்கத்திலே அல்ல; அவருடைய இதயத்திலேயே ஆசனம் போட்டு அமர்ந்து இருந்தவர்தான் துரைமுருகன். அத்தகைய இடம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது.

1971 -ம் ஆண்டு காட்பாடி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், அதே தொகுதியில் 8 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ராணிப்பேட்டை தொகுதியிலே 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் வென்று இந்த அவைக்கு வந்து தன்னுடைய ஆழமான கருத்துக்களைப் பதிவு செய்து, சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டு இருக்கிறார்.

இது இங்கே இருக்கக்கூடிய யாருக்கும் கிடைக்காத ஒரு பெருமை துரைமுருகனுக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக அவரை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

அதேபோன்று அவரிடம் எந்தத் துறையைக் கொடுத்தாலும், அதிலே ஒரு முத்திரை பதிப்பார். இப்போது சொல்ல சொன்னால்கூட, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து ஆறுகளின் பெயர்களை அவர் மடமடவென்று அப்படியே சொல்வார். அந்த அளவிற்குப் புலமை பெற்றவர்.

1925-ம் ஆண்டு காவிரிப் பிரச்சினை தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து, இன்றுவரை எல்லாத் தகவலையும் தன் மனதிலே சேகரித்து வைத்திருக்கிறார். இன்னும் அவரிடத்திலே இருக்கிற ஒரு கிரெடிட் என்னவென்றால், இந்தக் கூட்டத்தை அழ வைக்க வேண்டுமென்று நினைத்தால் அழ வைத்துவிடுவார்.

அதே நேரத்தில், இந்தக் கூட்டத்தை சிரிக்க வைக்க வேண்டுமென்று நினைத்தாலும், சிரிக்க வைத்து விடுவார். உங்களை எல்லாம் உணர்ச்சிவசப்பட வைக்கப்பட வேண்டுமென்றாலும், அதையும் செய்வார். ‘அமைதியாக இருங்கள் அண்ணா’ என்றாலும், இருந்துவிடுவார்.

அந்த அளவிற்கு ஆற்றல் பெற்ற ஒருவர், இன்றைக்கு நம்முடைய கழக அரசிலே நீர்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது இந்தக் கழகத்திற்கும், கழக அரசுக்கும் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பெருமை. இந்த அவையினுடைய முன்னவராக அவரைப் பெற்றிருப்பது, இந்த அவைக்குக் கிடைத் திருக்கக்கூடிய பெருமை.

தமிழ்நாடு சட்டமன்றத்திலே 50 ஆண்டுகள் பங்கெடுத்து, பொன் விழா நாயகராக அமைச்சர் துரைமுருகன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். எப்பொழுது பார்த்தாலும், அவர் பொன் போன்று பளபளவென்று சட்டைபோட்டுக் கொண்டு வருவார்.

புன்னகையும் அவரிடத்திலே எப்பொழுதும் இருக்கும். அத்தகைய சட்டமன்றப் பொன்விழா நாயகருக்குப் பாராட்டு தெரிவிக்கின்ற வகையிலே, இந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். இதனை நீங்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

‘தமிழ்நாடு சட்ட மன்றத்திலே, 1971 முதல் தற்பொழுது வரை, 10 முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு துறைகளில் அமைச்சராகச் செயல்பட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு இருக்கிறார்; பாடுபட்டுக் கொண்டு இருக்கிறார்.

அவையின் மாண்பைக் காப்பதிலே ஒரு நல்ல வழிகாட்டியாகச் செயல்பட்டு வருகிறார். நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனை இந்தப் பேரவை மனதாரப் பாராட்டுகிறது’ என்னும் இந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

அனைத்து உறுப்பினர்களும், கட்சி எல்லைகளைக் கடந்து இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்று பேரவைத் தலைவர் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். அமைச்சரும், என்னுடைய ஆருயிர் அண்ணனுமான துரைமுருகனை மனதார வாழ்த்துகிறேன்.