தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு

 தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு


மளிகை, காய்கறி கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு

அமைந்தகரையில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

கடந்த 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

தனியாக செயல்படும் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி இன்று காலையில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டுமே 6 மணியில் இருந்து செயல்பட்டன. இந்த கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

மளிகை மற்றும் காய்கறி கடைகளிலும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மருந்தகங்கள், பால் பூத்துகள் ஆகியவை வழக்கம் போல திறந்து இருந்தன. இதுபோன்ற அத்தியாவசிய கடைகளை தாண்டி வேறு எந்த கடைகளும் இன்று திறக்கப்படவில்லை.

இதன் காரணமாக சென்னையில் உள்ள முக்கிய வணிக பகுதிகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

டீக்கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டு இருப்பதால் காலையில் டீக்கடைகளிலும் ஊழியர்கள் அவசர அவசரமாக தங்களது பணிகளை மேற்கொண்டனர். உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே வழங்க அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் இன்று குறைந்த பணியாளர்களுடன் ஓட்டல்கள் செயல்பட்டன.

ஓட்டல்களில் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரையிலும் மதியம் 12 மணியில் இருந்து மாலை 3 மணி வரையிலும் மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் பார்சல்களுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இன்று ஓட்டல்களில் எப்போதும் போல பார்சல் விற்பனை மட்டும் நடைபெற்றது.

சென்னையில் தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட வணிக பகுதிகளில் பெரிய கடைகள் மற்றும் வணிக வளாகங்களை திறப்பதற்கு ஏற்கனவே தடை உள்ளது. இதனால் அந்த கடைகள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன.

ஆனால் சிறிய ஜவுளி கடைகள், பாத்திர கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து சிறிய கடைகளும் வழக்கம் போல செயல்பட்டு வந்தன. இந்த கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டு இருந்தன.

இதன் காரணமாக வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

அத்தியாவசிய கடைகளான மளிகை மற்றும் காய்கறி கடைகள் பகல் 12 மணி வரை திறந்து இருந்ததால் அவைகளை வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியில் வந்தனர். மற்ற கடைகள் மூடப்பட்டு இருந்தாலும் போக்குவரத்து வழக்கம் போல இயங்கியது.

பஸ், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் ஓடின. இருப்பினும் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் முக்கிய பஜார்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு இருந்தது.

உள்அரங்குகள் மற்றும் திறந்தவெளிகளில் கூட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதுபோன்ற எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. தியேட்டர்களும் மூடிக் கிடந்தன.

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், சலூன் கடைகள் செயல்படுவதற்கு கடந்த 20-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரக பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கிராமப்புறங்களில் அழகு நிலையங்களும், சலூன் நிலையங்களும் மூடப்பட்டு இருந்தன.

அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் ஆட்டோ, கார், தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. பால் வினியோகம், பத்திரிகைகள் வினியோகம் செய்யும் வாகனங்களும் வழக்கம்போல இயங்கின.

மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்து கடைகள் ஆகியவையும் செயல்பட்டன.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த வாகனங்கள், எரிபொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் ஆகியவையும் அனுமதிக்கப்பட்டன. பெட்ரோல் நிலையங்களும் வழக்கம் போல் செயல்பட்டன.

காய்கறிகள்

மளிகை, காய்கறி கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர். எலக்ட்ரானிக் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்பனை மையங்கள் ஆகியவற்றில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த தொழிலாளர்கள் அனைவருமே இன்று வேலையிழந்து தவித்தனர்.

காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறந்திருக்கும் என்கிற அறிவிப்பால் நேற்று மாலையில் இருந்து இரவு வரை இந்த கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இன்று பகல் 12 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க முடியும் என்பதால் அனைத்து மளிகை மற்றும் காய்கறி கடைகளிலும் வியாபாரிகள் குறைந்த அளவிலேயே பொருட்களை வாங்கி வைத்திருந்தனர். அதனை வாங்குவதற்கு பல இடங்களில் மக்கள் முண்டியடித்தனர்.

காலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது போன்று மாலையிலும் சில மணி நேரங்கள் கடைகளை திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வியாபாரிகள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். இன்றும் அந்த கோரிக்கைகளை வியாபாரிகள் வலியுறுத்தினார்கள்.

மாலை 4 மணியில் இருந்து இரவு 7 அல்லது 8 மணிவரையில் கடைகளை திறந்து வைத்தால் பொதுமக்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்க முடியும் என்றும் வியாபாரிகளும் ஓரளவுக்கு வருவாய் ஈட்டும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.