தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக 12,770 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்

 தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக 12,770 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் உள்ள 168 அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர கால அடிப்படையில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. பாதிக்கப்படுகின்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன், வெண்டிலேட்டர் வசதியை அதிகப்படுத்த அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்படுகிறது.

இதற்கான கட்டமைப்புகளை பொதுப்பணித் துறை மூலம் அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு பைப் லைன் வழியாக ஆக்சிஜன் செல்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொதுப் பணித்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

கூடுதலாக 12,770 படுக்கைகள் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 3 ஆயிரம் படுக்கைகள் தயாராகி விட்டன. மேலும் உள்ள படுக்கை வசதிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, தமிழகம் முழுவதும் உள்ள 168 அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர கால அடிப்படையில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

சென்னையில் 3,295 கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் கூடுதலாக 550 படுக்கைகளும், கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் 200 படுக்கைகளும், ஸ்டான்லி மருத்துவமனையில் 750 படுக்கைகள் தயார்படுத்தப் பட்டுள்ளன.

போர்க்கால அடிப்படையில் சென்னையில் உள்ள 11 மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர எந்தெந்த மருத்துவ மனைகளில் இட வசதி உள்ளது என்பதை ஆய்வு செய்து, அங்கு வார்டுகளை அதிகப்படுத்தும் பணியும் நடைபெறுகிறது.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றை சமாளிக்க ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று தினமும் கோரிக்கை எழுகிறது.

அதன் அடிப்படையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளும், காஞ்சீபுரம் மருத்துவமனையில் 50 படுக்கைகளும், கூடுதலாக அமைக்கப்படுகிறது.

இந்த பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 140 கோடி ரூபாய் செலவாகும் என்று திட்டமிடப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.