சசிகலா திட்டம் நிறைவேறுமா?


பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தனியார் பண்ணை வீட்டில் ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்புவதற்கு பிரமாண்ட ஏற்பாட்டினை தினகரன் செய்திருந்தார். கடந்த காலத்தில் பெங்க சிறையில் இருந்து விடுதலையான ஜெயலலிதா சென்னை வந்தபோது அவருக்கு வழங்கிய வரவேற்பை போல் சசிகலாவுக்கு வழங்க வேண்டும் என்று கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொண்டர்கள் உற்சாகத்தை கட்டுப்படுத்துவதற்கும் கூட்டத்தை தடைசெய்வதற்கும் தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் ஓரளவு மட்டுமே பயனளித்தது. மற்றப்படி சசிகலா வருகையை தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது ஆர்பாட்டங்களை நெறிபடுத்துவதற்கோ காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. சசிகலாவின் வருகையால் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை பொதுமக்கள் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாகவே அமைந்துள்ளது என்று பொதுமக்கள் தரப்பில் புலம்பல்களும் ஒலித்துக் கொண்டிருந்தது. தமிழகம் முழுவதும் இருந்து சென்னை, பெங்களூர் நெடுஞ்சாலையில் கூடியிருந்த அமமுக தொண்டர்கள் சசிகலா காரில் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்று அதிமுக கொடியை சசிகலா வாகனத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியும் சசிகலா வருகையும் சசிகலாவின் அரசியல் பிரவேசத்தை வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல அதிமுகவினருக்கு ஒருவித எச்சரிக்கை மணியையும் இது காட்டுகிறது. சென்னை தியாகநகரில் உள்ள தனது உறவினர் இல்லத்தில் தங்கிக்கொண்டு அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கையை சசிகலா மேற்கொள்வார் என்பது உறுதி. சசிகலாவின் அரசியல் பிரவேசத்திற்கு மத்திய அரசின் மறைமுக உதவியும் ஆதரவும் இருப்பது போல் தெரிந்தாலும் அதிகாரப்பூர்வமான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே இருக்கிறது என்பது தெளிவாகிறது. திட்டமிட்ட ஏற்பாட்டின்படி மிகப் பெரிய அளவில் செலவு செய்து சசிகலாவுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு டிடி தினகரனுக்கும் பலனளிக்குமா என்பதை போக போகத் தான் உணரமுடியும்.

- டெல்லிகுருஜி