தமிழ்நாட்டில் ராகுல்காந்திக்கு வரவேற்பும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு எதிர்ப்பும்!

 

1989 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி அவர்கள் தன் மனைவி சோனியாகாந்தி அவர்களுடன் தமிழ்நாட்டில் உள்ள பட்டிதொட்டிகளிளெல்லாம் சுற்றுப்பயணம் செய்து 13 முறை தமிழகத்திற்குப் படையெடுத்தார். மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தனது பிரச்சார பயணத்தை தொடர்ந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டது.

சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெறமுடிந்தது. ஆனால் 26 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வெற்றிப்பெற்றார்கள். 50 லட்சத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற திமுக கழகம் தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து ஆட்சியை கைப்பற்றியது. அதே 50 லட்சம் வாக்குகள் பெற்ற அதிமுக 27 இடங்கள் மட்டுமே பெறமுடிந்தது. நான்கு முனை போட்டியாக நடைபெற்ற அந்த தேர்தலில் ராஜீவ்காந்தி அவர்களுக்கு  மதிப்பளித்த தமிழ்நாட்டு வாக்காளர்கள் மூப்பனார் மீது நம்பிக்கை வைக்க மறுத்துவிட்டார்கள் என்பதை வெளிப்படையாக தெரிந்தது. இது கடந்த கால வரலாறு. அதே போல் தற்பொழுது ராகுல்காந்தி அவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது பொதுமக்களும் கல்லூரி மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் அதிகளவு கூட்டம் கூடுகிறது. கேள்விகள் கேட்டு ராகுல்காந்தி அவர்களிடம் இருந்து பதிலை பெற்று மகிழ்ச்சி அடைகிறார்கள். ராகுல்காந்தி அவர்களின் வருகை அவருடைய செயல்பாடுகள் பாதுகாப்பு வளையங்களை தாண்டி தமிழக மக்களை நேசிக்கும் பாங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ராகுல்காந்தி அவர்களை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் காட்டும் விதம் தமிழர்களையும், தமிழக மக்களையும் நான் நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டின் மக்கள் மீதும் எங்கள் குடும்பமும் அக்கறையுடன் இருப்பதை என்னால் உறுதிசெய்ய முடியும் என்று கூறுவதும் தமிழக மக்களையும், அரசியல் கட்சிகளையும் யோசிக்க வைத்துள்ளது. செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆதரவு தமிழக மக்களின் விசுவாசத்தையும் நேரில் பார்த்து வியந்து போகிறார் ராகுல்காந்தி.

நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லையென்றாலும், தமிழ்நாட்டை நேசிக்கிறேன் என்ற வார்த்தை தமிழக மக்கள் இதயங்களில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக அரசியல் நிலவரங்களை தெளிவாக புரிந்துக்கொள்ளும்படி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் கட்சியின் தலைவர்களுக்கும் எடுத்து கூறவில்லை என்பதும் கூட்டணி கட்சிகளின் பலத்தை மட்டுமே எடுத்துக்கூறி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை தமிழ்நாட்டில் குறைத்து மதிப்பிடுவதற்கு காரணமாக இருந்துவிட்டார்கள் என்பது ராகுல்காந்தி அவர்களுக்கு சுற்றுப்பயணத்தின் போது கிடைக்கின்ற மதிப்பும் மரியாதையும் கூடுகின்ற மக்கள் கூட்டத்தையும் பார்க்கும் பொழுது எதிர்காலத்தில் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை ராகுல்காந்தி செய்வார் என்ற நம்பிக்கையும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பிரகாசமாக தெரிகிறது.

- டெல்லிகுருஜி