அதிமுக அரசு ஏற்பாடு செய்வது கடைந்தெடுத்த அரசியல் மோசடி துரைமுருகன் குற்றச்சாட்டு

 

தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய திட்டத்தை இப்போது பிரதமர் தொடங்கி வைப்பார் என்று அ.தி.மு.க. அரசு ஏற்பாடு செய்வது கடைந்தெடுத்த அரசியல் மோசடி என்று துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

முதல் அமைச்சராக கருணாநிதி இருந்தபோது அறிவித்த 3 திட்டங்கள், தாமிரபரணி கருமேனியாறு இணைப்பு திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், தென்பென்ணை செய்யாறு இணைப்பு திட்டம். இந்த 3 திட்டங்களில் முதல்கட்டமாக, தாமிரபரணி கருமேனியாறு இணைப்பு திட்டம் மற்றும் காவிரிகுண்டாறு இணைப்பு திட்டம் ஆகிய இவ்விரு திட்டங்களை முதற்கட்டாக எடுத்துக் கொள்ளப்படும் என்று அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதி சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இவ்வாறு அறிவிக்கப்பட்ட திட்டங்களை உடனடியாக துவக்கவும் ஆணையிட்டு நிதியும் ஒதுக்கீடு செய்துவிட்டார். இந்த 2 திட்டங்களும் தி.மு.க. ஆட்சி தொடர்ந்திருந்தால், என்றைக்றோ முடிந்திருக்கும். தலைவர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம் என்பதால், அ.தி.மு.க. அரசு இதில் அக்கறை காட்டவில்லை . ஆனால், திட்டத்தையும் கைவிட முடியாமல், அ.தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை விவாதம் வரும்போதெல்லாம், இந்த திட்டம் நிலுவையில் இருப்பதாகவும், நிலம் கையப்படுத்த ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்கள்.

காவிரி குண்டாறு தாமிரபரணி கருமேனியாறு திட்டங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 2009 ம் ஆண்டே துவக்கப்பட்டு, நடைமுறையில் நடந்து கொண்டிருக்கும், இந்த நீண்ட நெடிய வரலாறு படைத்த திட்டங்களில் ஒன்றான காவிரி குண்டாறு திட்டத்தை, ‘வருகின்ற 14ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி, துவக்கி வைப்பார்' என்று பத்திரிகையில் செய்தி வந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுவிட்டேன்.

தி.மு.க. ஆட்சியில், 2009ம் ஆண்டிலேயே துவக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த திட்டம், ஆட்சி மாற்றத்தால், அ.தி.மு.க. ஆட்சியிலும் மெத்தனமாக நடைபெற்று வரும் ஒரு திட்டத்தை, பிரதமர் துவக்கி வைப்பார் என்று அ.தி.மு.க. அரசு ஏற்பாடு செய்வது கடைந்தெடுத்த அரசியல் மோசடி.

தமிழ்நாட்டு மக்களை 10 ஆண்டுகளாக ஏமாற்றி வரும், அ.தி.மு.க. அரசு, இன்று பிரதமரையே ஏமாற்றப் பார்க்கிறது. எடப்பாடி பழனிசாமி அரசு ஏமாற்ற பார்க்கிறது என்றால், பிரதமர் எப்படி ஏமாறுகிறார் என்பதுதான் எனக்கு ஆச்சர்யம்?. பிரதமர் ஏமாறலாமா?.

- தொகுப்பு