புதுச்சேரியில் மாமனாரா, மருமகனா! யார் முதல்வர்!!

 

காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்த நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் சமீபத்தில் பாஜக கட்சியில் சேர்ந்துள்ளார். இதனால் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் தனது மாமனாருமான முன்னாள் முதல்வர் இன்னாள் எதிர்கட்சி தலைவர் என்.ரங்கசாமிக்கு போட்டியாக இவர் பாஜக கட்சியில் சேர்ந்து முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் நமச்சிவாயம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாராயணசாமி குறுக்கு வழியில் முதல்வர் பதவியை தட்டி பறித்துக் கொண்டார். அன்று முதல் இன்று வரை முதல்வர் பதவி மீது தனியாத தாகம் கொண்டு அந்த பதவியை அடைகின்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். நமச்சிவாயம் அதற்கான தருணத்தை காத்திருந்து தற்பொழுது பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் அதிமுக, பாஜக வைத்து ரங்கசாமியை முதல்வராக அறிவித்து கடந்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தொடர்கிறது. இந்த நிலையில் முதல்வர் பதவிக்கு பாஜக கட்சி வேட்பாளரை நிறுத்துமானால் கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் வெளியேறுவது உறுதி. மாமனாருக்கே முதல்வராக வாய்ப்பு ஏற்படும்.

- டெல்லிகுருஜி