உற்சாகத்தில் திமுக ஏமாந்து விட கூடாது!!


தமிழக அரசியலில் தனக்கு இடம் இல்லை என்பதை திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெள்ள தெளிவாக தமிழக மக்களுக்கு தெரிவித்துவிட்டார். இது வழக்கமான அறிவிப்பு அல்ல. அரசியலில் ரஜினிகாந்த் எடுக்கும் இறுதி முடிவாகவே பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தி திராவிட கட்சிகளுக்கு சவாலாக தமிழக அரசியலில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ள சிலர் கடும் முயற்சி எடுத்து அந்த முயற்சியில் படுதோல்வி அடைந்துவிட்டார்கள். இருந்தாலும் அடிப்பட்ட பாம்பு சும்மாவிடாது என்பது போல் ரஜினியின் பெயரை சொல்லி எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் பெரும் குழப்பத்தை விளைவித்து குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க காத்திருந்த சில இயக்கங்கள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்களில் தீவிரமாக ஈடுபடுவார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தைப் பொறுத்தவரை தங்கள் முயற்சியில் இடைக்காலமாக கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். இதன் விளைவு அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் பாதிப்புக்கு உள்ளாகும். ஏன் தோல்வியை சந்திக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகலாம். அதே நேரம் பாஜக கட்சி மத்தியில் ஆட்சியில் இருப்பதினால் தனது செல்வாக்கை பயன்படுத்தி திமு கழகத்திற்கு பல இடையூறுகளை ஏற்படுத்தக் கூடும். இதன் மூலம் திமுகவின் ஆட்சிக் கனவை களைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் படலாம். அதே நேரம் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியை இழந்து இருக்கும் சூழ்நிலையில் மிகவும் கவனமாக இருந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் திமு கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

கட்சியின் தலைமை ஓரளவிற்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை சந்தித்தாலும் அதன் மூலம் கிடைக்கக் கூடிய வாக்குகள் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு திமுகவிற்கு கை கொடுக்காது. மனதில் வைத்து திமுக தலைமை மாவட்ட வாரியாக கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துகின்ற பணியில் உடனடியாக களத்திற்கு செல்லவேண்டும். அதே நேரம் தோழமை கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு பொதுமக்கள் வாக்குவங்கியை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கு கடும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

ஒருவேளை ரஜினிகாந்த் அவர்கள் புதிய கட்சியை தொடங்கவில்லை என்ற அறிவிப்பு திமுகவிற்கு சாதகமாகன சூழ்நிலையை உருவாக்கி அதுவே ஆட்சி அமைக்க போதுமான அளவிற்கு வெற்றியை தரும் என்று நம்பினால் திமுகவினர் ஏமாந்து போவார்கள். ஆகவே இப்பொழுதே சுதாகரித்துக் கொண்டு தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளும் விதமாக மக்களின் நன்மதிப்பை பெறவேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். அப்பொழுது தான் ஆட்சி என்ற தங்கள் இலக்கை திமுக அடைய முடியும். அடுத்த ஆட்சிக்கு தகுதியானவர்கள் நாம் தான் என்று நினைத்து உற்சாகத்தில் இருந்து விட்டால் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்கள் கூறியதுப் போல் திமுகவிற்கு தோல்வி தவிர்க்க முடியாததாகி விடும்.

விழித்திரிந்து உழைக்க வேண்டும். அதன் மூலம் வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும். இதுவே திமுகவின் வெற்றிக்கு கை கொடுக்கும்.

- டெல்லிகுருஜி