உள்துறை அமித்ஷா வருகை! திராவிட கட்சிகளுக்கு சவால்!

உள்துறை அமித்ஷா வருகை! திராவிட கட்சிகளுக்கு சவால்!


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் குறிப்பாக பாஜக கட்சியை எதிர்க்கும் கட்சிகளுக்கு இந்த எதிர்ப்பு என்பது அச்சங்கலந்த எதிர்பார்ப்பாக அமையும் என்று தமிழ் மாநில பாஜக கட்சி தலைவர் எல்.முருகன் ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் அமித்ஷா அவர்களின் வருகை தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க கூடிய பேசும் பொருளாக அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை. அமித்ஷா அவர்கள் தனது துறைக்கு சம்பந்தமே இல்லாத இரு துறைகளுக்கு தொடர்புடைய திட்டங்களை தொடங்கி வைப்பதாகவும் அதற்கு அமித்ஷா அவர்களே வரவேண்டும் என்று விரும்பியதாகவும் இதற்கு முதலமைச்சர் முழு சம்மதம் தெரி வித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


கடந்த வாரத்திற்கு முன்பு தமிழக பாஜக கட்சி தலைவர் முருகன் வேல்யாத்திரையை தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகளுக்கும் மாவட்ட வாரியாக வேல்யாத்திரை நடத்தி வருகின்ற வேளையில் அதை தடுத்து நிறுத்த அனுமதியளித்த தமிழக அரசு நீதிமன்றத்தில் தனது கருத்தையும் தெரிவித்துள்ளது. இருந்தாலும் வேல்யாத்திரையை தடுத்து நிறுத்த அதிமுக அரசு முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த நிலையில் வேல்யாத்திரை நடந்து முடிந்தப் பிறகு முருகன் அவர்களையும் பாஜக கட்சி யினரையும் கைது செய்வதும் பிறகு விடுதலை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே நேரம் யாத்திரையும் தொடர்கிறது. இது அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் உள்ள புரிந்துணர்வை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது.


திடீரென்று ஒருநாள் வேல்யாத்திரை பயணத்தை நிறுத்திவிட்டு பாஜக மாநில தலைவர் முருகன் அவர்களை சந்தித்து பாஜகவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அப்பொழுது சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டப் பொழுது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று முருகன் கூறினார். அந்த சந்திப்புக்கும் தற்பொழுது அமித்ஷா சென்னை வருவதற்கும் தொடர்பு இருப்பதாக தற்பொழுது தெரியவந்துள்ளது.


பாஜக கட்சி தொண்டர்களை விட அதிமுக தொண்டர்களே அதிக அளவில் கூடி ஆடல் பாடல்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை விமானத் நிலையத்தில் இருந்து சென்னை லீலா பேலஸ்வரை வரவேற்பு வழங்கியது. மிகப் பெரிய அளவில் பேசப்படுகின்றது. வேல் யாத்திரையில் அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் புகைப்படத்தையும் அவரது பாடலையும் பாஜக பயன்படுத்திய பொழுது எழுந்த விமர்சனம் அமித்ஷாவை வரவேற்க அதிமுகவினர் சென்ற பொழுது எந்தவித விமர்சனமும் எழவில்லை . இதை பார்க்கும் பொழுது அதிமுக மெல்ல மெல்ல பாஜக கட்சி வாக்கு வங்கியாக மாறிவருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வமோ அதிமுக தொண்டர்களை இனி வருங்காலத்தில் கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை என்பதையும் இந்த நிகழ்வுகளை பார்க்கும் பொழுது தெரியவருகிறது. அதிகாரத்தில் இருக்கும்வரை மட்டுமே அதிமுக தொண்டர்கள் ஒபிஎஸ், ஈபிஎஸ் பின்னால் செல்ல விரும்புவார்கள். அதிகாரத்தை இழந்தப் பிறகு இவர்கள் வேறு ஒரு கட்சியின் கட்டுப்பாட்டில் தான் இயங்குவார்கள் என்பதையும் காணமுடிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பொறுத்தவரை தான் மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும் என்ற ஆசை அவரை ஆட்கொண்டுள்ளது.


ஆகவே பாஜக கட்சியுடனும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களுடன் எப்பொழுதும் இணைந்து போவதையே விரும்புகிறார். ஆனால் அதிமுக தொண்டர்கள் குறிப்பாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆதரவாளர்களாக இருப்பவர்கள் பாஜக கட்சியின் பின்னால் செல்ல விரும்பமாட்டார்கள் என்பதற்கு பல ஆதரங்கள் உண்டு. இதை பார்க்கும் பொழுது அதிமுக கொடியில் உள்ள சிகப்பு கலர் மெல்ல மெல்ல காவி கலராக மாறுவதற்கும் எதிர்காலத்தில் அதுவே சாத்தியமாகும் என்பதற்கும் பல உதாரணங்களை கூறலாம்.


தற்போதுள்ள சூழ்நிலையில் லட்சுமணன் கிழித்த கோட்டை சீதை தாண்டினார். அமித்ஷா கிழித்த கோட்டினை எடப்பாடியால் தாண்ட இயலவில்லை நிதர்சனமான உண்மை . ஆக திராவிட முன்னேற்ற கழகம் அமித்ஷா வருகை குறித்து எந்தவிதமான தனது கருத்தினை வெளிப்படுத்தாமல் இருப்பது இந்துக்களின் வாக்குகளை தக்கவைத்து கொள்வதற்காக என்பதை உணர முடிகிறது. அதிமுகவை பொறுத்தவரை ஏறக்குறைய பாஜக கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்பதை அமித்ஷா வருகை தமிழக மக்களுக்கு உணர்த்துகிறது. திராவிட இயக்கம் கடவுள் மறுப்பு கொள்கை, அதிமுக, திமுக ஆதிக்கம் இனி தமிழகத்தில் மெல்ல மெல்ல தங்கள் செல்வாக்கை இழந்து வருகிறது என்பதையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையின் மூலம் உணரமுடிகிறது.


மொத்தத்தில் அமித்ஷா வருகை திராவிட கட்சிகளுக்கு ஒருவித முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை .