அதிமுக - திமுக தோழமை கட்சிகளுக்கு எச்சரிக்கை தானாக வெளியேறுங்கள் இல்லை வெளியேற்றப்படுவீர்கள்

அதிமுக - திமுக
தோழமை கட்சிகளுக்கு எச்சரிக்கை
தானாக வெளியேறுங்கள்
இல்லை வெளியேற்றப்படுவீர்கள்


திராவிட கட்சிகள் தமிழகத்தில் அரசியலில் புதிய நிலைப்பாட்டை எடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி வியூகம் வகுக்கப்பட்டு அதை சுலபமாக செயல்படுத்துவதற்கு அதிமுக - திமுக தயாராகி வருகின்றது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் இரு கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருப்பதால் தேர்தலை எதிர்கொள்ளும் பொழுது தோழமை கட்சிகளை தோள் மீது சுமந்துக்கொண்டு அவர்களுக்கு போட்டியிடுகின்ற அளவிற்கு தொகுதிகளை கொடுத்து செலவுக்கு பணமும் கொடுத்து வெற்றிக்காக நாம் உழைக்க வேண்டுமா? என்ற எண்ணத்தில் அதிமுக திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இரு கட்சிகளும் தங்கள் சார்பில் கருத்துக் கணிப்பு நடத்துவதற்காக ஏஜெண்டுகளை நியமனம் செய்து ஆலோசனைகளை பெற்றுவருகிறது.


தோழமை கட்சிகள் ஒவ்வொன்றும் தங்கள் விருப்பம் போல் கூடுதல் இடங்களில் போட்டியிடுவதற்கு கோரிக்கை வைக்கவேண்டும் என்று கூடிப்பேசி குறைந்த இடங்களை கொடுத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து அதை நடைமுறைப் படுத்துவதற்கு தயாராகி கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் சிபிஎம், சிபிஐ உள்பட பல கட்சிகள் அந்த கூட்டணியில் தற்பொழுது இடம் பெற்றுள்ளது. இதே கூட்டணி நாடாளுமன்ற தேர்தலை திமுக தலைமையில் ஒருங்கிணைந்து போட்டியிட்டு முழு வெற்றியை அடைந்துள்ளது.


அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, பாமக, தேமுதிக உள்பட பல கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டணி கட்சிகள் அதிமுக தலைமையில் ஒன்றிணைந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் அதிமுக, திமுக தனித்தனியாக களத்தில் நின்று மூன்றில் ஒரு பங்கு இடத்தையோ அல்லது இரண்டில் ஒரு பங்கு இடத்தையோ அல்லது தனித்து ஆட்சி அமைந்து முழு வெற்றியை பெறுவதற்கோ ஏன் முயற்சி செய்யக்கூடாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. தோழமை கட்சிகளுக்கு வழங்குகின்ற சாதிவாரி இடக் ஒதுக்கீட்டினை தங்கள் கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து சாதி வாரியாக 234 தொகுதிகளையும் பிரித்துக் கொடுத்து அதிக இடங்களில் தனித்து போட்டியிடுவதை விட மொத்த இடங்களிலும் (234) ஒரே கட்சி தேர்தலை சந்திக்கலாம் என்று அரசியல் ஆலோசனைகள் வழங்கும் ஏஜெண்டுகள் மூலம் தங்களுக்கு கிடைத்துள்ள ஆலோசனையை ஏற்று இதுபோன்ற ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவை ஊடகங்களும் பத்திரிகை தொலைக்காட்சிகளும் ஊதிப் பெரிதாக்கி அவரவர்கள் சார்ந்துள்ள அரசியல் இயக்கங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக விவாதங்களை நடத்துகின்றன.


குறிப்பாக திமுகவில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறுமா? கூடவே மதிமுக வெளியேறுமா? என்றும் அதிமுகவில் இருந்து பாமக வெளியேறுமா? காங்கிரஸ் வெளியேறுமா? என்று ஆறுடம் கணித்து விவாதம் கணித்து நடத்துகிறார்கள். இது ஒரு வகையில் சில கட்சிகளுக்கு சாதகமாகவும் பல கட்சிகளுக்கு எதிராகவும் இருந்தாலும் ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் பல நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதன்படி திமுக தோழமை கட்சிகளுக்கு இடம் ஒதுக்குகிறோம் ஆனால் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட விரும்பினால் ஓரிரு இடங்கள் மட்டுமே தர முடியும் என்று எடுத்து கூறுகிறார்கள்.


மேலும் அதிக இடங்களில் ஒவ்வொருவரும் தங்கள் சின்னம் கட்சியில் நிற்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். தேர்தலை எதிர்கொள்வதற்கு போதுமான நிதி ஆதரங்கள் இல்லாமல் இருப்பதால் நீங்கள் எடுக்கும் முடிவு எதிரணிக்கு சாதகமாக முடியும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். இதே எச்சரிக்கையை தான் அதிமுகவும் தங்கள் தோழமை கட்சிகளுக்கு எடுத்து கூறுவதாக தெரிகிறது. சீட்டை எவ்வளவு குறைத்து கொள்ள முடியுமோ அவ்வளவு குறைத்து கொள்ளுங்கள். தேர்தல் செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் கட்சி சின்னத்தில் போட்டியிட விரும்பினால் செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் தேர்தல் செலவுக்கு எங்களிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள். இந்த தேர்தல் என்பது எங்களுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருப்பதால் எங்கள் நிலைமையை உணர்ந்து தோழமைகள் கட்சிகள் அதிமுக தரப்பில் கூறுவதாக தகவல்கள் வருகின்றன.


இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி தங்கள் கட்சியின் கருத்தை சமீபத்தில் செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்கின்ற எந்த கட்சியும் எங்கள் கூட்டணியில் இடம் பெறலாம். தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் எங்களை பொறுத்தவரையில் ஒரே நிலை தான். இதை ஏற்றுக்கொண்டு எங்கள் கூட்டணியில் தொடராம். ஏற்க மறுத்தால் நீங்கள் வெளியேறலாம். என்கின்ற அளவில் அதிமுகவின் கருத்தை கே.பி.முனுசாமி வெளிப்படுத்திவிட்டார். அதே போல் திமுகவின் கருத்தை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி மேடைகளில் வெளிப்படுத்தி வருகிறார். 200 இடங்களில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ஆக திராவிட கட்சிகள் தங்கள் உறுதிப்பாட்டினை தெளிவாக சட்டமன்ற தேர்தலில் எடுத்துவிட்டார்கள் என்பதை காட்டுகிறது. ஏற்றுக்கொள்பவர்கள் தோழமை உணர்வோடு திமுக, அதிமுக கட்சியின் தலைமையில் தேர்தலை சந்திக்கலாம். அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறி தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்கின்ற எச்சரிக்கை மணியை இரு கட்சிகளும் அடித்து விட்டன.


ஏற்போர் பயணத்தை தொடரலாம், மறுப்போர் தங்கள் சொந்த வழியில் பயணிக்கலாம். தேர்தலுக்கான ஆயத்தப் பணியில் இரு கழகங்களும் தற்போது தயாராகி விட்டது. இந்த கொள்கை முடிவு என்பது ஒரு வகையில் சரியான முடிவாகவே பொதுமக்கள் பார்வைக்கு தெரிகிறது. கழகங்கள் உறுதியாக இருப்பார்களா என்பது போக போக தெரியும்.


இந்த கொள்கை முடிவு என்ப கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி விஜயகாந்த் தலைமையில் அமைந்து படுதோல்வியை சந்தித்தது போல் மீண்டும் ஒரு படுதோல்வியை உதிரி கட்சிகள் ஒன்றிணைந்து சந்திப்பதற்கு விரும்ப மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை .


- சாமி