துரைமுருகனுக்கு பூட்டு பாமக விஷயத்தில் அடக்கி வாசிக்கவும் ஸ்டாலின் கட்டளை

துரைமுருகனுக்கு பூட்டு
பாமக விஷயத்தில் அடக்கி வாசிக்கவும்
ஸ்டாலின் கட்டளை


திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் எப்பொழுதும் நகைச்சுவையுடனும், சர்ச்சை கலந்த வார்த்தைகளையும் புள்ளி விபரத்தோடு பேசும் ஆற்றலும் திறமையும் கொண்டவர். பல நேரங்களில் கலைஞர் கருணாநிதி அவர்கள் சோர்வுற்ற நிலையில் கோபாலபுரத்தில் இல்லத்தில் இருக்கும் போதெல்லாம் துரைமுருகனுக்கு உத்தரவு பறக்கும். தலைவர் கோபாலபுரத்திற்கு உங்களை அழைக்கிறார் என்பது தான் அது.


துரைமுருகன் வந்தவுடன் சோர்வுற்ற கலைஞர் உற்சாகம் அடைந்துவிடுவார். நகைச்சுவை நையாண்டியுடன் பல ஜோக்குகளை கலைஞர் முன்பு அவிழ்த்து விடுவதில் பலே கெட்டிக்காரர். இதற்கு முன்பாகவே கலைஞரின் சமைலறையில் சென்று இன்றைய பலகாரங்களை ருசித்து விட்டு தான் கலைஞர் முன் அமருவார் துரைமுருகன். கலைஞர் இதயம் முரசொலிமாறனுக்கு அடுத்தப்படியாக துரைமுருகன் பெயரை தான் அதிகளவில் உச்சரித்திருக்கும். காரணம் பயணக் களைப்பே தெரியாமல் எந்தவொரு பயணத்தையும் கலைஞரின் உற்சாக மூடில் வைத்திருப்பது துரைமுருகன் அவர்களின் கைவந்த கலை. அதிக அளவில் சிற்றுண்டிகளை சுவைத்து சாப்பிடுவதில் துரைமுருகன் அலாதி இன்பம் அடைவார். இப்படிப்பட்ட துரைமுருகன் கலைஞரோடும் கலைஞர் குடும்பத்தினரோடும் தான் ஒரு அங்கத்தினராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கலைஞர் குடும்பத்திற்கு என்றும் இன்றும் ராஜவிசுவாசியாகவே இருந்து வருகிறார்.


இவர் சமீபத்தில் வேலூர் மாவட்டம் சுற்றுப்பயணத்தின் போது செய்தியாளர்களிடம் சில தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். குறிப்பாக கூட்டணி கட்சிக்குள் அதிர்வலைகளை உருவாக்கினார். அதே போல் அதிமுக கூட்டணியும் இடம் பெறும் கட்சிகள் மத்தியில் ஒருவிதமான சபலத்தையும் ஏற்படுத்தியுள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் இடத்தில் இது ஒரு விதமான எதிர்ப்பையும் வெளிப்படுத்தக் கூடிய அளவிலேயே அமைந்து விட்டது என்று விமர்சனங்கள் எழுந்தது. உடனயைாக சுதாகரித்துக்கொண்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எனது கருத்தில் ஏதேனும் சிலருக்கு வருத்தம் இருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன் என்று வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லையென்று ஒரு மறுப்பு அறிக்கையும் வெளியிட்டு சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.


இந்த நிலையில் துரைமுருகன் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அன்பு கட்டளை இட்டுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மனம் புண்படும் அளவிற்கோ அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு வருவது போன்ற தோற்றத்தையோ கட்சியினர் மத்தியில் குழப்பம் ஏற்படுகின்ற அளவிற்கு பேசுவதை தவிர்க்கும்மாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு பின் துரைமுருகன் அவர்கள் தொடர்ந்து திமுக தொண்டர்கள் விரும்புகின்ற உற்சாகப்படுத்துகின்ற வகையிலும் கட்சியின் தலைமை மகிழ்ச்சி அடையும் விதத்திலும் தனது கருத்துக்களை பொது இடங்களில் பேசுவதை அதிகரித்துக் கொண்டார்.


சிலர் துரைமுருகன் அவர்களுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்து பல விமர்சனங்களை முன்வைத்தாலும் 1966-ஆம் ஆண்டில் கள்ளக்குறிச்சி மாநாட்டில் கொடியேற்றுவதற்கு கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருந்த பொழுதும் தம்பி துரைமுருகனை அழைத்து வா கொடி ஏற்றட்டும் என்று அறிவித்தப் பொழுது திமுகவினர் அனைவரும் உற்சாகம் அடைந்தார்களே தவிர மூத்த தலைவர்கள் யாரும் பொறாமைக் கொண்டு முகம் சுளிக்கவில்லை என்பது பார்க்கும் பொழுது இன்றைக்கும் அந்த நிகழ்ச்சி என் மனதில் நிழல் ஆடுகிறது. அதே போல் தற்பொழுது திமுக தலைமை பதவியேற்றிக்கும் மு.க.ஸ்டாலின் என்னை அழைத்து பொதுச்செயலாளராக தேர்வு செய்ததையும் ஒப்பிட்டு பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறுகிறாராம் பொதுச்செயலாளர் துரைமுருகன்.


ஆக திமுக கூட்டணியில் பாமக வருவதை விரும்பவில்லை என்பதை மறைமுகமாக ஸ்டாலின் தன் கட்சி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவித்துள்ளார்கள் என்பதை பார்க்க முடிகிறது.


- சாமி