மந்திர மொழிகள் திருக்குறளார் சொன்னதும் நாடு கேட்டதும்

ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும் பலநூறு வருடங்கள் சிந்தித்துச் சொன்னவை மந்திரங்கள் ஆகும். அவற்றை நாம் அப்படியே ஏற்று நடக்கிற போதுதான் உலகம் சிறக்கும்.


ஞானிகள் அடிக்கடி தோன்றமாட்டார்கள். இரண்டு நாளைக்கு முன்னாடி தான் ஒரு ஞானி பிறந்தார். அடுத்த வாரம் இன்னொருவர் பிறப்பார் என்று சொல்ல முடியாது. ஞானிகளும், சித்தர்களும் 100 வருடத்திற்கு ஒரு முறை தான் பிறப்பார்கள். எனவே அவர்கள் சொல்கிற வார்த்தைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துகிற மந்திரங்களாக உள்ளன. அதைத் தான் வள்ளுவர்


“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்“
(குறள் - 28)


பயன் நிறந்த ‘மறைமொழி' எனப்படும் சொற்களைச் சொல்லும் முனிவர்களுடைய பெருமையினை அவர்கள் ஆணையாகச் சொல்லும் அச்சொற்களே (மறைமொழி) காட்டிவிடும் என்பது பொருள். எனவே அவர்கள் சிந்தித்துச் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். தேவையில்லாத கேள்விகளைக் கேட்கக் கூடாது.


ஒரு டாக்டரிடம் போகிறோம், வயிற்றுவலி என்று சொன்னவுடன், அவர் பரிசோதித்து மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்து வாங்கிச் சாப்பிடச் சொல்கிறார். உடனே அதை அப்படியே கேட்கிறோம். அதை விட்டு விட்டு அவர்கிட்டே ‘இதைச் சாப்பிட்டா வயிற்று வலி எப்படிச் சரியாகும்? என்று கேள்வி கேட்பதில்லை.


முகப்பேரிலிருந்து சைதாப்பேட்டை போவதற்கு பஸ்ஸில் ஏறுகிறோம். கண்டக்டர் டிக்கெட் வாங்கச் சொல்லுகிறார். உடனே அவரிடம் சைதாப்பேட்டை போகுமான்னு எனக்குச் சந்தேகமாயிருக்கு, அதனால் சைதாப்பேட்டை போய்ச் சேர்ந்தவுடன் தான் டிக்கெட் எடுப்பேன் என்று சொன்னால் கண்டக்டர் சும்மா யிருப்பாரா? அதனால் தான் நாம் இன்பமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ ஞானிகளும், சித்தர்களும் சொன்ன கருத்துக்களை அப்படியே ஏற்று நடந்தால் பதவி கிட்டும். பசித்திரு, தனித்திரு, விழித்திரு, பதவி கிட்டும் என்று வள்ளலார் குறிப்பிடுகிறார். ஞானிகளும், சித்தர்களும் வாழ்ந்து மறைந்த இடங்களில் பிற்காலத்தில் கோயில்கள் உருவாகும். அயோக்கியர்கள் நிறைந்த இடத்தில் பிற்காலத்தில் சாராயக் கடைகள் தான் வரும்.


போலி சாமியார் : போலி சாமியார்கள் ஞானிகள் போல் பேசுவார்கள். அதை நம்பக் கூடாது. ஒருவருக்குத் திருமணமாகி நெடுங்காலமாகக் குழந்தை பிறக்கவில்லை . உடனே அவரது உறவினர்களும், நண்பர்களும் ஒரு சாமியாரைக் குறிப்பிட்டு அவரிடம் போய் வேண்டினால் குழந்தை வரம் தருவார் என்று சொன்னார்கள். உடனே இருவரும் போய், குழந்தை இல்லாத விவரத்தைச் சாமியாரிடம் சொன்னார்கள். அதற்கு அந்தச் சாமியார் “கவலைப்படாதே நீ இராமேஸ்வரம் ஒரு தடவை போய் வந்தால் குழந்தை பிறக்கும்" என்று சொன்னார். அதற்குக் குழந்தை வரம் கேட்ட நபர் சொன்னார், “சாமி, எனக்குச் சொந்த ஊரே இராமேஸ்வரம் தான்” இப்பகூட அங்கிருந்து தான் வரேன் என்றாராம்.


இந்தக் கதையை நான் சொல்லக் கேட்ட தந்தை பெரியார் அவர்கள், “முனிசாமி இதை எல்லாக் கூட்டத்திலும் சொல்லுங்க, அப்பதான் பகுத்தறிவோடு மக்கள் சிந்திப்பார்கள்” என்று அடிக்கடி சொல்லுவார்.


“எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு”
(குறள் - 299)


"புறத்தில் இருளினைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆகாவாம். துறவறத் தன்மையால் நிறைந்த சான்றோர்க்கு விளக்காவது பொய்யாமையாகிய விளக்காகும்" என்பது பொருள்.


- குறளார் கோபிநாதன்