நாகப்ப படையாட்சி சிலை! மயிலாடுதுறையில் வன்னியர்கள் மோதல்! டாக்டர் ராமதாஸ் மவுனம் ஏன்?

நாகப்ப படையாட்சி சிலை!
மயிலாடுதுறையில் வன்னியர்கள் மோதல்!
டாக்டர் ராமதாஸ் மவுனம் ஏன்?


வன்னியர்களின் முழு ஆதரவை பெற்றுவந்த பாட்டாளி மக்கள் கட்சி, சமீப காலமாக அதன் செயல்பாடுகளால் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் மக்கள் ஆதரவை இழந்து வருகின்றது. குறிப்பாக தருமபுரி, சேலம், கடலூர், வேலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் டாக்டர் ராமதாஸ் மீது கடுங்கோபத்தில் உள்ளார்கள்.


குறிப்பாக டாக்டர் ராமதாஸ் தலைமையில் இயங்கிவரும் வன்னியர் சங்கம், அதன் செயல்பாடுகள், வன்னியர் மக்கள் நலனுக்காக இல்லை என்பது பலரது கருத்தாக உள்ளது. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும், பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு தேவை என்ற நிலையில் இருப்பதினால் வன்னியர்கள் குறித்து டாக்டர் ராமதாஸ் எந்தவிதமான கவலையும் கொள்வதில்லை! மாறாக வன்னியர்கள் தன்னை ஆதரிப்பது அவர்கள் கடமை என்றும் மாற்றுகட்சி வன்னியர்கள் கூட டாக்டர் ராமதாஸ் ஆதரவு இருந்தால் தேர்தலில் நமது கட்சி வெற்றி பெறலாம் என்று கணக்கு போடுவதையும், டாக்டர் ராமதாஸ் நன்றாக புரிந்து வைத்துள்ளார். ஆதலால் வன்னியர்கள் பற்றிய கவலை அவருக்கு இல்லை. இந்த நிலையில் நேற்றுவரையில் இருந்து வந்த டாக்டர் ராமதாஸ் ஆதரவு வன்னியர்கள், இனி வருங்காலங்களில் அவரது செயல்களுக்கு முக்கியத்துவம் தருவதற்கும், ஆதரவு நிலைக்கும் அதிக அளவில் முன்வர மாட்டார்கள்.


குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் டாக்டர் ராமதாஸ் ஆதரவு பெற்றவர்கள், செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். மகாத்மாகாந்தியின் சத்யாகிரக போராட்டத்திற்கு முதன் முதலில் முழுவடிவம் கொடுத்து ‘ஒத்துழையாமை' அமைதிவழி போராட்டம் மூலம் தங்கள் வெற்றியை நிலை நாட்டிய மாவீரன் சாமி நாகப்ப படையாட்சிக்கு சிலை வைத்தபோது அதனை எதிர்ப்பதும், வன்னியர் பொதுசொத்து ராமதாஸ் சொத்தாக பாவித்து ஆக்கரமித்து பெயர் பலகை வைப்பதும், ஏற்புடையது இல்லை.


இத்தகைய தகாத செயல் டாக்டர் ராமதாஸ் பொதுவாழ்வில் மிகப்பெரிய களங்கத்தையே ஏற்படுத்தும். மேலும் வன்னியர் சங்கம் என்பது பாட்டாளி மக்கள் கட்சியானது, மீண்டும் வன்னியர் சங்கமாகிவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் ஆபத்து உருவாகும். இதனால் கடந்த முப்பது ஆண்டு கால அரசியல் இயக்கம், அதன் செயல்பாடுகள் மக்கள் மன்றத்தில் இருந்து தனிமைப்பட்டுவிடும்.


வன்னியர்கள் கோரிக்கையும் முழக்கமும், மாநிலத்தில் 20 சதவீதம், மத்தியில் 2 சதவீதம் என்ற கோரிக்கை காற்றில் கரைந்து போனது. தனி இட ஒதுக்கீடு முழக்கம் அரசியல் கட்சி தண்ணீரில் கலந்து காணாமல் போய்விட்டது. தொடர் சாலை மறியல் 21 பேர் உயிர்பலி அவர்கள் குடும்ப சூழ்நிலை என்னவானது...? என்ற கேள்வி எழுகின்றது.


வன்னியர்கள் தங்களை தாங்களே தாக்கிக்கொண்டு உயிர்பலியாவதை நிறுத்தவேண்டும். இத்தகைய செயல்கள் டாக்டர் ராமதாஸ் ஆதரவுடன் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு இனி வருங்காலங்களில் இடம் தராமல், விழிப்புடன் நின்று அரசியல் சதுரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தனது வெற்றிக்காக பாடுபட வேண்டும். பகை மறந்து நட்புடன் வன்னியர்கள் வாழ்ந்திட அனைத்து வன்னியர்களும் நம்மவர் என்ற கருத்தினை முன்வைத்து களமாடுவோம்.


வன்னியர் மாவட்டந்தோறும் நம் முன்னோர்கள் சிலைகள் திறந்து உரிமையை நிலை நாட்டுவோம்.


விலகியிருப்போம் விழித்திருப்போம்!
உலகை ஆள்வதற்கு நாள் குறிப்போம்!
வன்னியர் வாழ்ந்தால் விட்டுக் கொடுங்கள்!
வீழ்ந்துவிட்டால், கைகொடுத்து உயர்த்தி விடுங்கள்
வேண்டாம் பகை உணர்வு வேண்டும் நட்புறவு!


- சாமி