அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? போட்டி ஆரம்பம் ஒ.பி.எஸ் அணி ஈ.பி.எஸ் அணி கருத்துக்களை பரிமாற்றம் தொடங்கி விட்டது

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்?
போட்டி ஆரம்பம்
ஒ.பி.எஸ் அணி ஈ.பி.எஸ் அணி கருத்துக்களை பரிமாற்றம் தொடங்கி விட்டது


2021 சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 6 மாதங்களுக்கு முன்பாகவே அதிமுகவில் முதல்வர் பதவிக்கு யாரென்ற கேள்வி அமைச்சர்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் ஏற்படுத்தப்படுகிறது. முதல்வர் பதவியை இழந்து துணை முதல்வர் பதவியை வகிக்கும் ஒ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் வகிப்பதால் அவருக்கு மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்ற ஆசை துளிர்விட ஆரம்பித்துள்ளது. இதற்கேற்றாற் போல் தனது ஆதரவாளர்களை அணி திரட்டுவதில் முனைப்பு காட்டுகிறார் ஓ.பன்னீர்செல்வம். இதன் வெளிப்பாடு தான் மதுரையில் சமீபத்தில் அமைச்சர் செல்லூர்ராஜ் செய்தியாளர்களிடத்தில் தனது கருத்தினை வெளிப்படுத்தினார். “அடுத்த முதல்வரை சட்டமன்ற உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்பது அவரது கருத்தாக உள்ளது.


இதற்கு பதிலளிக்க வேண்டிய அதிமுகவின் அதிகாரபூர்வமான செய்தி தொடர்பாளரோ அல்லது முதல்வரோ தங்கள் கருத்தினை வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டிய வேளையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் உடனடியாக அமைச்சர் செல்லூர்ராஜுவின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார். “எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான் இன்று முதல்வர் நாளையும் முதல்வர் அவரை முன்னிறுத்தியே 2021 தேர்தலை அதிமுக சந்திக்கும்" முதல்வர் யாரென்று அறிவிக்காமல் தேர்தலுக்குப் பிறகு தேர்வு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால் அது குதிரை பேரத்திற்கு தான் வழிவகுக்கும். ஆகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் தான் தேர்தலை சந்திக்க வேண்டும் அடுத்த முதல்வராக இவரையே மக்கள் முன் நிறுத்த வேண்டும் என்று தனது கருத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்.


ஆக தேர்தலை வருவதற்கு முன்பாகவே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அதிமுக அமைச்சர்களுக்குள் எழுந்திருப்பது தெளிவாக தெரிகிறது. இதை அறிந்து தெரிந்துக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகம் முழுவதும் ஊரடங்கை அறிவித்துவிட்டு மக்களையெல்லாம் வீட்டுக்குள் முடங்கி இருக்கவேண்டும் என்று தினசரி தொலைக்காட்சி, செய்தித்தாள் மூலமாக வேண்டுகோள் விடுத்துவரும் முதல்வர் கொரனாவின் ஆபத்தையும் பொறுப்படுத்தாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்திக்கொண்டு மக்களுக்கு திட்டங்களை அறிவித்து வருவதுடன் தனது முக அடையாளத்தை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தி வருகிறார்.


குறிப்பாக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் துணைமுதல்வர் என்ற அடிப்படையில் ஒ.பன்னீர்செல்வம் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மற்ற அமைச்சர்களும் தங்கள் மாவட்டங்களை தாண்டி முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. ஆகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை முன்னிறுத்தி அடுத்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற ஆசை எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் ஏற்பட்டு விட்டது.


இந்த நிலையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் வேறுவிதமான சிந்தனை தோன்றியுள்ளது. இந்த நிலையில் அடுத்த முதல்வர் தென்மாவட்டங்களிலிருந்தா (முக்கொலத்தோர்கள்), அல்லது மேற்கு மாவட்டத்திலிருந்தா (கொங்கு வேளாளர்கள்), வடக்கு மாவட்டத்திலிருந்தா (வன்னியர்கள்) இந்த மூன்று மாவட்டங்களிலிருந்து முதல்வர் தேர்வாக போகிறார்களா என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டே அதிமுக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் செயல்பட  வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்துறை அமைச்சர் தங்கமணி, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போன்றோர் கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார்கள்.


துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து அதற்கேற்றாற் போல் அவர் தனது ஆதரவு அமைச்சர்களான கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர்ராஜு, வருவாய் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் போன்றவர்கள் மூலம் தனது அணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்த இரு அணியும் சேராமல் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தொழிற்துறை அமைச்சர் எம்.பி.சம்பத், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் போன்றோர் எந்தவித கருத்தினையும் வெளிப்படுத்தாமல் மௌனமாக இருந்து வருகிறார்கள்.


துணைமுதல்வர் அணியில் உள்ள துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் போன்றோர் எத்தகைய முடிவை எடுப்பார்கள் என்ற சூழ்நிலையில் அதிமுக கட்சி நிர்வாகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒருவேளை இரு அணிகளையும் இணைத்து தினகரன் தலைமையில் செயல்படும் அணியையும் அதிமுகவில் கொண்டு வந்து 2021 -ம் ஆண்ட நடைப்பெறும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கலாம் என்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஒரு கணக்குப் போட்டு கொண்டிருக்கலாம். இந்த அணி தற்பொழுது உள்ள பிரதமர் எடப்பாடி அணியும் துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணியும் மாவட்ட செயலாளர் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வேட்பாளர் தேர்வில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு தோன்றினால் சசிகலாவின் தலையீடு அதிமுகவில் தவிர்க்க முடியாததாகிவிடும்.


சசிகலா, எடப்பாடி பழனிசாமி அவர்களையே முதல்வர் வேட்பாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த 30 ஆண்டுகளாக அதிமுக என்றால் முக்குலத்தோர் கட்சி என்ற நிலைமாறி கொங்கு வேளாளர் கட்சியாக உருவெடுத்துள்ளதோ என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் முதல்வர் யார் என்ற போட்டி எழுந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.