ஒ.பி.எஸ் நம்பியோர் கைவிடப்பட்டார் லெட்சுமணன் திமுகவில் சேர்ந்தார்

ஒ.பி.எஸ் நம்பியோர் கைவிடப்பட்டார்
லெட்சுமணன் திமுகவில் சேர்ந்தார்


அதிமுக வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (மேல்சபை) விழுப்புரம் லெட்சுமணன் அதிமுக அணி இரண்டாக உடைந்த பொழுது ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவினார். அப்பொழுது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்த பொழுது அவருடன் அதிமுக வில் இணைந்தார் லெட்சுமணன். சில காலம் கழித்து ஒபிஎஸ் ஆதரவாளர் லெட்சுமணனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்டது. தனது ஆதரவாளர் பதவி பறிக்கப்படுகிறது என்று எந்தவித பதட்டமும் படாமல் தனக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்ததே போதும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியையும் தன் வசம் வைத்துக் கொண்டு தன்னை நம்பியவர்களுக்காக எந்தவித குரலையும் எழுப்பாதவர் ஒ.பன்னீர்செல்வம்.


தற்பொழுது சில மாவட்டங்களை இரண்டாகவும், மூன்றாகவும் பிரித்தப் பொழுது விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பார்கள். அப்பொழுது தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று காத்திருந்தார் லெட்சுமணன். தற்பொழுது எம்.பி. பதவியையும் இழந்து மாவட்ட செயலாளர் பதவியையும் இழந்து விட்ட லெட்சுமணன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கட்சி மேலிடர் தலைவர்களான ஒ.பன்னீர்செல்வம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, அமைச்சர் தங்கமணி போன்றவர்களிடம் முறையிட்டார். ஆனால் ஒருவர் கூட பதவியை பறிகொடுத்த லெட்சுமணனுக்கு ஆறுதலாகவோ நம்பிக்கையாகவோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அலட்சியமாகவே இருந்துவிட்டார்கள். இதனால் மனம் உடைந்த லெட்சுமணன் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு சட்டமன்றத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.


இதனை அறிந்த திமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி அவர்கள் லெட்சுமணனை அணுகி திமுகவில் சேருமாறு அழைப்பு விடுத்தார். அழைப்பினை ஏற்றுக்கொண்ட லெட்சுமணன் திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னையில் சந்தித்து அவரது தலைமையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த தகவல் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் ஒ.பன்னீர்செல்வம் அணியிலும் மேலும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒ.பி.எஸ் யை நம்பி அவரது பின்னால் சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக தற்பொழுது மாறிவிட்டார்கள்.


நம்பியவரை நட்டாத்தில் விட்ட ஒ.பன்னீர்செல்வத்தை நம்பி அதிமுகவில் உள்ளவர்கள் அவருக்கு ஆதரவாக வரும் காலங்களில் எவரும் செல்லமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு லெட்சுமணன் எடுத்துக்காட்டாக ஆகிவிட்டார்.


- ஆர்.பி.