திமுக மீது பாஜக தாக்குதல் ஆரம்பம்!

திமுக மீது பாஜக தாக்குதல் ஆரம்பம்!


மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா இருவரும் எதிர் எதிர் துருவங்களாக அரசியல் களத்தில் நின்று தமிழ்நாட்டில் களம் ஆடினார்கள். ஒருவர் இந்திக்கு எதிராகவும் மற்றொருவர் இந்தி மொழிக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பியவர். ஆனால் காங்கிரஸ் ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்க அண்ணாவும் ராஜாஜியும் கூட்டணி அமைத்தார்கள் (1967). அதுமட்டும் அல்லாமல் மதவாத இயக்கமான மூஸ்லிம்லீக் அந்த அணியும் அண்ணாவின் முயற்சியால் ஒர் அணியில் அதாவது திமுக தலைமையில் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அந்த முயற்சியில் அண்ணா வெற்றிப்பெற்றார் இது கடந்த கால வரலாறு.


இதில் வேடிக்கை என்னவென்றால் பிராமணர்கள் எதிர்ப்பு இயக்கத் தலைவர் அண்ணாதுரை பிராமணர் ராஜாஜியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டுடன் தோற்கடித்தார் என்பது தான். ஆனால் அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் கருணாநிதி தலைமையில் இயங்கி வந்த திமுக அண்ணா பெரியார் கொள்கைளை விட்டு விலகி பாஜக கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தது. அண்ணா வீழ்த்திய காங்கிரஸ் பேரியக்கத்தை 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக காங்கிரஸ் முதல்வர் இந்திராகாந்தி தலைமையில் தமிழ்நாட்டில் தேர்தலை சந்தித்தது. தலா 117 இடங்களில் (50/50) என்ற அளவில் காங்கிரஸ் திமுக போட்டியிட்டு ஆட்சியமையாமல் போனது. எம்.ஜி.ஆர் ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் வந்துவிட்டது.


சர்க்காரியா கமிஷன் அறிக்கையை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக, காங்கிரஸ் அணி உருவானது. மதவாத கட்சி என்று பாஜக வை விமர்சித்து வந்த திமுக அதே மதவாத கட்சியுடன் கூட்டணி அமைத்தது கடந்தகால வரலாறு. அதிமுக, திமுக இரு கட்சிகளும் திராவிட கொள்கை சிந்தாந்தங்களில் முழுக்க முழுக்க ஈடுபட்டு வந்தாலும் அண்ணா , பெரியார் வழித்தோன்றல் என்பதை இன்றும் உயர்த்தி பிடிக்கின்றன. ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் தேசிய கட்சியின் கூட்டணியை நாடுவதில் இரண்டு கட்சிகளும் விதிவிலக்கு அல்ல. காங்கிரஸ், பாஜக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது.


திராவிட கட்சிகளை காங்கிரஸ் கூட்டணி எந்தவிதத்திலும் மாநிலத்தில் பாதிப்புக்கு உள்ளாக்கியது இல்லை. திமுக அதிமுக இரண்டு கட்சிகளையும் பலகினப்படுத்துவதிலும் காங்கிரஸ் தலைமை ஈடுபடுவதில்லை . இனிவரும் காலங்களிலும் அத்தகைய முயற்சிகளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் மாநில காங்கிரஸ் தலைமையும் ஈடுபடாது என்றே கூறலாம். ஆனால் பாஜக கட்சி அப்படியல்ல. இந்துத்துவா கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் அகில பாரத தேசிய கட்சியாகும். அதன் நோக்கம் இந்தியா முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தவேண்டும் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கியே செயல்பட்டு வரும் இயக்கமாகும்.


ஆகவே தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக கட்சியின் பார்வை என்பது திராவிட கொள்கைகளுக்கு எதிராக அரசியல் வியூகம் அமைக்க வேண்டும் என்பதாகும். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தமது முழு கவனத்தையும் செலுத்தும் விதமாக தமிழ்நாடு பாஜக கட்சி நிர்வாகிகளுக்கு டெல்லி மேலிடம் திட்டத்தை உருவாக்கி தந்துள்ளது. அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பாஜக கட்சிக்கும் நேரடி போட்டி என்ற கருத்தினை முன்வைத்து பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தனது கருத்தை செய்தியாளர்கள் மத்தியில் முன்வைத்துள்ளார். இதனை தொடர்ந்து மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்த பொழுது அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து நீடிக்கும் என்கிறார்.


இந்த இருவரது கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக தலைவர்கள் அந்த கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது பாரதிய ஜனதா கட்சியின் அகில பாரத தலைவர் ஜே.பி.நட்டா அவர்களுடைய கருத்துக்கு தான் நாங்கள் பதிலளிக்க முடியும் என்றும் 2021 ம் ஆண்டு தேர்தலை அதிமுக தலைவமையில் உள்ள கூட்டணி தான் வழி நடத்தும் என்றும் கூறுகிறார் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி அவர்களும்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசியல் களம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக ஆட்சியைப் பற்றியோ அதன் கூட்டணியை பற்றியோ பேசுவதை விட திமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் ஏற்பட்டு விட கூடாது என்கின்ற நோக்கத்தில் பாஜக கட்சியின் திட்டமும் செயல்பாடுகளும் அமைந்துள்ளதை பார்க்க முடிகிறது. இது எதை காட்டுகிறது என்றால் “கழகங்கள் இல்லா தமிழகம்" என்ற கோஷத்தை முன் வைத்து இந்துத்துவா கொள்கையை முன்னிலைப்படுத்தி திமுகவை தனிமைப்படுத்துகின்ற பணியினை தமிழகத்தில் பாஜக கட்சி முன்கூட்டியே தொடங்கி விட்டதை வெளிப்படையாக தெரிகிறது.


இந்த சவால்களை எதிர்கொள்வதற்கும் இந்துக்களின் வாக்குகளை பெறுவதற்கும் என்ன வழி என்பதை திமுக கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஆராய வேண்டும்.


- டெல்லி குருஜி