இருமொழி கொள்கையா, மும்மொழி கொள்கையா
சிக்கலில் திராவிட கட்சிகள்
புதிய கல்வி கொள்கைகளின் மூலம் தமிழ்நாட்டின் மாணவ மாணவிகள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்கின்ற பொழுது மும்மொழி கொள்கை என்ற திட்டம் மத்திய அரசு அறிவித்துள்ளது. தாய்மொழி கல்வி கட்டாயம் என்பதும் அதே போல் ஆங்கிலம் அதற்கு அடுத்தாற் போல் சமஸ்கிருதம் உள்ளிட்ட வேறு ஏதேனும் ஒரு மொழி விரும்பி எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அறிவித்துள்ளது. நாடு விடுதலை பெற்று சுமார் 70 ஆண்டுகளாக மாநில அரசாங்கம் மொழிவாரி பிரிக்கப்பட்டு அந்தந்த மாநில மொழிகளுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மாநில மொழி உலகளாவிய மொழியான ஆங்கிலம் இந்திய மொழியான இந்தி போன்ற மொழிகள் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் நடைமுறையில் இருந்து வந்தது. அந்த நிலையில் சற்று மாற்றத்தினை மத்திய அரசாங்கம் தற்பொழுது கொண்டுவந்துள்ளது. கடந்த 30, 35 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வியில் மிகப் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யப்பட்டு புதிய கல்விக் கொள்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் பெரிய அளவில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. காரணம் தமிழகம் இருமொழி கொள்கையை கடைப்பிடிப்பதனால் கட்டாயமாக மும்மொழி கொள்கை திட்டத்தை எதிர்த்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தினால் கல்வி போதிக்கின்ற கல்வி கூடங்களோ அல்லது கல்வி கற்கக் கூடிய மாணவ மாணவிகளோ ஒரு சில அம்சங்களை தவிர ஏனைய திருத்தங்களில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. 1ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய பாஸ் என்கின்ற நிலையில் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 3-ம் வகுப்பு 5-ம் வகுப்பு ஒரு தேர்வு முறை பயிற்சி புதிய கல்வி கொள்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 30% அளவிற்கு பாடத்திட்டத்தின் சுமை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் புதிய கல்வி கொள்கையில் மூலம் அறிவித்திருக்கிறது.
இருமொழி கொள்கை என்ற அடைமொழி திராவிடர் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் மறைந்த முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை அவர்களால் தமிழகத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. காரணம் தமிழ் மொழியை மட்டுமே முன்னிலைப்படுத்தி இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி மத்திய அரசின் இந்தி திணிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்ததினால் இத்தகைய இருமொழி கொள்கை என்பதை அந்த காலகட்டத்தில் அறிவித்தார் சி.என்.அண்ணாதுரை. அதனை தொடர்ந்து ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக மற்றும் தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகள் அனைத்தும் இருமொழி கொள்கையை பின்பற்றியே தங்கள் அரசியலில் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தது.
ஆனால் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி இருமொழி கொள்கைக்கு ஆதரவாக எந்தவொரு காலகட்டத்திலும் தனது குரலை உயர்த்தி பேசியதில்லை. மாறாக தமிழ்நாட்டின் மேற்கொள்ளப்பட்ட போராட்ட நிலைகளை இந்திக்கு எதிராக அறிந்து கொண்டு இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்ற வரை அவர்கள் மீது இந்தி திணிக்கப்படாது என்கின்ற வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதை திராவிட கட்சிகள் தங்களுக்கு கிடைத்த வெற்றியாக நினைத்து விழாக் கொண்டாடி மகிழ்ந்தது. அதே நேரத்தில் திமுக கொள்கை சித்தாந்தமாக உருவெடுத்த திராவிட நாடு கொள்கையை சி.என். அண்ணாதுரை மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து தனது கோரிக்கையை கைவிட்டார் என்பதும் வரலாறு.
இத்தகைய சூழலில் கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிப் புரிந்து வந்த அதிமுக, திமுக இரு கட்சிகளும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுடனும் திமுக, அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றிப்பெற்ற ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த போதும் மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் தங்கள் கோரிக்கையான இருமொழி கொள்கைக்கு நிரந்தர தீர்வை இவர்களால் உருவாக்க இயலவில்லை. காலப்போக்கில் மத்திய அரசின் கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டு சி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கினார்கள்.
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டின் உள்ள 60 சதவிதம் வீட்டு பிள்ளைகள் சிபிஎஸ்சி பள்ளி யிலேயே கல்வி கற்று வருகிறார்கள். இருந்த போதிலும் கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநில அரசின் பாடத்திட்டம் மூலம் தனியார் பள்ளிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாநில பாடத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதை விட மத்திய அரசு பாடத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்தினார்கள். பொதுவாக சிபிஎஸ்சி மாணவர்களின் கல்வி தரம் உயர்வாக கருதப்பட்டது. அதே நேரத்தில் மாநில பாடத்திட்டமும் அதற்கு சமமாக இருந்தாலும் மாணவர்களின் கவனமும் அதிக மதிப்பெண் பெறுவதிலேயே சென்று கொண்டிருந்ததே தவிர முழுக்க முழுக்க மாநில அரசின் பாடத்திட்டத்தின் சேர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் மிக குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் திராவிட கட்சிகள் தமிழ்நாடு பாடதிட்டங்களில் அண்ணா , பெரியார் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்தது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள பாடத்திட்டத்தில் பெரியார் பற்றிய பாடப்பகுதிகள் முற்றிலும் நீக்கப்பட்டு புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டத்தை எதிர்க்கிறார்களா அல்லது பெரியார் பற்றிய குறிப்பை நீக்கிவிட்டதற்காக புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. உண்ண உணவு, இருக்க இடம், அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு கல்வி போதிப்பதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் நவவோதயா பள்ளி திட்டம். அதையும் திராவிட இயக்கங்கள் எதிர்த்தன. காரணம் அத்தகைய பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படும் என்ற கூறி எதிர்த்தார்கள். இப்பொழுது தமிழகத்தை பொறுத்தவரை கல்வி முழுக்க முழுக்க தனியார் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டப் பிறகு இருமொழிக் கொள்கை தான் நடைமுறையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எப்படி தனியார் பள்ளிகளை நிர்பந்திக்க முடியும் அரசு பள்ளிகளுக்கும் அறிவுறுத்த முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
நாடாளுமன்றத்தில் பேசவேண்டியதை ஊடகங்கள் மன்றத்திலும் பேசி மக்களை குழப்பத்திற்கு ஆளாக்குகிறார்களே தவிர இருமொழி கொள்கை என்ற கோட்பாட்டிற்கு இனியாவது நிரந்தர தீர்வை காண்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டால் திமுக, அதிமுகவின் திறமையை பாராட்டலாம். நீட் தேர்வுக்கு இன்று வரை விலக்கு வேண்டும் விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை தவிர கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்று இவர்களால் ஏன் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ஆக புதிய கல்வி திட்டத்தை வாக்குவங்கிக்காக மட்டும் பயன்படுத்தாமல் ன் நலனுக்காகவும் மாணவ மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதாகவும் யோசித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள கல்வி கொள்கையை உள்ள குறைகளை கலைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குரலை உயர்த்தி ஒலிக்க செய்யவேண்டும் என்பதே நமது கருத்து.
- சாமி