முதல்வர் பதவி! எல்லோரும் ஆசைப்படுங்கள் இல்லாதவர்களுக்கு விட்டுகொடுங்கள்

முதல்வர் பதவி!
எல்லோரும் ஆசைப்படுங்கள்
இல்லாதவர்களுக்கு விட்டுகொடுங்கள்


ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்றார் இயேசுபிரான். அதற்கேற்றாற் போல் உள்ளது. வன்னிய அரசியல்வாதிகளின் செயல்பாடுகளும், நடவடிக்கைளும் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை சமூக நீதியையும், மற்றவர்கள் பரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் அதை கண்டு கொதித்தெழுந்து உரிமைகளை மீட்க போராட்டங்களை நடத்துவதில்லை. கோரிக்கைகள் அரசிடம் வைப்பதில்லை.


அரசியல் அதிகாரங்களை கைப்பற்றி அதன் வழியாக நமது உரிமைகளை மீட்க நம் முயற்சிகள் மேற்கொள்வதில்லை. மாறாக தனிமனிதர்களுக்கு பதவி கிடைத்தால் போதும் என்று அவரவர் வேலையை மட்டுமே நாம் செய்து கொண்டிருக்கிறோம். அரசின் செயல்பாடுகளையும் அதில் ஏற்படுகின்ற குறைகளையும் தைரியமாக சுட்டிக்காட்டி பறிக்கப்படுகின்ற உரிமைகளை மீட்பதற்கு ஆட்சியில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களும் முயற்சி செய்வதில்லை. அமைச்சர்கள் மூலம் இழைக்கப்பட்ட அநீதியை மீட்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் (வன்னியர்கள்) அமைச்சர்கள் மூலம் அழுத்தம் தருவதில்லை . இன்றைய தமிழக அரசியலில் 5 அமைச்சர்கள் வன்னியர்கள் இடம் பெற்றிருந்தும் 6 அமைச்சர்கள் (கொங்கு வேளாளர்கள்) அவர்கள் அமைந்துள்ள நிலையினை ஏட்டி பிடிக்க முடியவில்லை. அதே போல் 7 அமைச்சர்கள் (முக்குலோத்தோர்) கொண்ட அளவிற்கு நம்மால் உயர்பதவிகளை பிடிக்க அடைய இயலவில்லை.


தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும் நாம் இன்னும் குடிசைகளில் வாழ்ந்து கொண்டு ஒற்றுமையும் விழிப்புணர்வும் இல்லாமல் வாழ்க்கை என்னும் ஒட்டப்பந்தயத்தில் வெற்றி என்னும் இலக்கை நோக்கி நம்மால் பயணிக்கமுடியவில்லை. ஒருமுறை விழுந்த பின்னர் மீண்டும் எழுந்து ஒடுகிறவர்கள் கூட வெற்றிப்பெறுகிறார்கள். ஆனால் நாம் மட்டும் விழிந்துக் கிடக்கிறோம். நம் முன்னாள் நிற்பவர்கள் ஆட்கள் மாறினாலும் பதவியிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் உயர்ந்து நிற்கிறார்கள். நாம் விழுந்தது விழுந்தபடியே கிடக்கிறோம்.


நாம் ஆண்ட பரம்பரை என்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இப்பொழுது நாம் என்னவாக இருக்கிறோம். அரசியலில் முதலிடத்தில் நம்மால் ஏன் வர இயலவில்லை என்று ஒருபோதும் யோசிப்பதில்லை. வயல் வெளிகளிலும், களத்து மேட்டிலும் வேலை செய்து கால் வயிற்று கஞ்சிக்கு வழிதேடும் நிலையில் தானே இருக்கிறோம். தமிழ்நாட்டில் குடிசை நிறைந்த மாவட்டங்கள் என்றால் அது வன்னியர் வசிக்கின்ற மாவட்டங்களாக தான் இருக்கிறது. குறிப்பாக நாகப்பட்டினம் இ அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் ஆகும். இந்த மாவட்டங்களில் தற்போது உள்ள நிலவரப்படி சுமார் 150 சட்டமன்ற தொகுதிகளும் 20 மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளும் அடங்கியுள்ளன.


அதே நேரம் தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சியாக வருகின்றவர்களுக்கு 120 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால் போதும். இதை நாம் ஒருபோதும் சிந்திப்பதும் இல்லை. கணக்கு போட்டு பார்ப்பதும் இல்லை. ஒரு சிலர் மனிதர்கள் கேள்வி எழுப்பினால் இது தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று சுருக்கமாக நமக்கு பதில் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களில் தெற்கு தமிழகம், மேற்கு தமிழகம் மாவட்டங்களில் சுமார் 30 விழுக்காடு மட்டுமே குடிசைப்பகுதிகள் உள்ளன. மீதமுள்ள 70 சதவீதம் குடிசைகள் வடமாவட்டங்களில் தான் உள்ளன. அதிக அளவில் குடிசைகளில் வாழும் சமுதாயங்கள் என்றால் அது வன்னியர் சமுதாயம் அல்லது ஆதிதிராவிடர் சமுதாயம் இரண்டாக இருக்க முடியும்.


தமிழ்நாட்டில் குடிசை மாற்று வாரியம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 50 ஆண்டுகளும் திராவிட கட்சிகளின் கையில் தான் ஆட்சி அதிகாரம் இருந்து வந்தது. ஆனால் குடிசை மாற்று வாரியம் மூலமும் அல்லது மாநில அரசின் பசுமை வீடு திட்டத்தின் மூலமோ மத்திய அரசின் பல்வேறு வீட்டு வசதிகள் திட்டத்தின் மூலமோ தமிழ்நாட்டில் உள்ள குடிசைகளை வீடுகளுக்கு மாற்று திட்டம் மூலம் பயனாளிகளுக்கு உரிய வகையில் சென்று சேர்ந்திருக்கிறதா என்றால் மிகமிக குறைவாக தான் இருக்கும்.


இத்தகைய சூழ்நிலைகளை மாற்றுவதற்கும் தீப்பிடிக்காத வீடுகளையும் உருவாக்கி தருவதற்கும் கடந்த 50 ஆண்டுகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை . இதற்காக திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சியாளர்களை நாம் குறைசொல்ல இயலாது. இந்த இரு கட்சிகளின் ஆட்சியில் அங்கம் வகித்த வன்னிய அமைச்சர்கள் (வன்னியர்கள்) செயல்பாடுகள் சரியாக இருந்திருக்குமேயானால் ஓரளவு மேலே உள்ள குறைகளை களைந்திருக்க முடியும். துரதிஷ்டவசமாக அப்படி ஒரு நிலை ஏற்படவில்லை. அதுமட்டுமல்ல இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து சமுதாயத்திற்கு பாடுபடுவதாக சொன்ன இயக்கங்களும் இது போன்ற குறைகளை களைவதற்கு தயாராக இல்லை. தமிழ்நாட்டில் 2 1/2 கோடி வன்னியர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 1 லட்சம் பேர் அரசு பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுகின்றனர். ஆனால் அத்தகையவர்களுக்கு அரசு அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களால் எந்தவித பாதுகாப்பும் கிடைத்ததில்லை. குறிப்பாக மாவட்ட ஆட்சி தலைவர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் போன்ற பதவிகள் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பணி வழங்கப்படுவதில்லை . அப்படியே பணி வழங்கினாலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் வழங்கப்படும். உதாரணத்திற்கு தற்போதுள்ள தமிழக அரசின் அரசு துறை செயலாளர்கள் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நாற்றுநடுதல், அறுவடை செய்தல், கல் உடைத்தல், கட்டிட சித்தாள், கொத்தனார் போன்ற கட்டுமான பணிகளையும், வீடுகளில் பத்து பாத்திரம் தேய்க்கும் வேலைகளையும், தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பதும், அன்றாட கூலிக்கு அல்லல் பட வேண்டிய நிலையில் தான் வன்னியர்கள் வாழ்க்கை பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இவற்றை தவிர வேறு எந்த பணிகளும் வன்னியர்களுக்கு கிடைத்து விட கூடாது என்பதில் ஆட்சியாளர்களும் ஆதிக்கவர்க்கத்தினரும் தெளிவாக உள்ளனர். இவற்றை புரிந்துக் கொள்ள கூட நேரம் இல்லாமல், விழிப்புணர்வு இல்லாமல் தவறுக்கு காரணம் என்று அறிந்து கொள்ளாமல் மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தை கவனிக்காமல் பலர் மரணத்தை தவழுகிறார்கள்.


இந்த நிலை மாற்றப்பட வேண்டாமா? நாம் இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஒட்டுப்போடுபவர்களாகவே இருக்க வேண்டும். அரசாங்கம் இலவசமாக கொடுக்கும் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு நாட்டை ஆளும் தகுதி நமக்கில்லை என்று வாழப்போகிறோமா. அல்லது ஆளும் சக்தியை பெற்று முதலிடத்திற்கு முன்னேற்ற போகிறோமா? கலைத்துறை, பத்திரிகைதுறை, தொலைக்காட்சி துறை, தொழிற்துறை, இப்படி பல துறைகளில் நமது கவனம் (வன்னியர்) செல்வதில்லை .


பொருளாதார வளர்ச்சியில் நாம் மிக மிக குறைந்த அளவிலேயே இருந்து வருகின்றோம். ஆனால் தமிழகத்தில் தொழில் அதிபர்கள் பட்டியலில் 100 அல்லது 1000 என்ற அளவில் நம் ஒருவர் கூட அதில் இடம் பெறவில்லை. அதே போல் உயர் மருத்துவமனை நடத்துவதிலும் வணிக வளாகங்கள் வைத்திருப்பதும் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பேருந்து நிறுவனம் நடத்துபவர்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் இத்தகைய பட்டியலில் நாம் ஒருவர் கூட இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்வியாக உள்ளது.


தமிழ்நாட்டில் தனிநபர் வருமானத்தில் வன்னியர்கள் எந்தளவில் பின்தங்கி இருக்கிறார்கள் என்றால் சென்னை மேற்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்கள் என்று கணக்கிட்டு பார்த்தால் வன்னியர்கள் வாழும் மாவட்டங்களில் மிகமிக குறைவாக தான் இருக்கிறது என்பது தெளிவாக தெரியும். இத்தகைய நிலைகளை எல்லாம் மனதிலே நிறுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் 1921 -ம் ஆண்டு முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடைபெற்றுவருகிறது. இதில் கடந்த 100 ஆண்டுகளில் முதலமைச்சர்களாக இருந்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. ஏ.சுப்பராயலு ரெட்டியார், பனகல் ராஜா, டி.சுப்பராயன், பி.முனுசாமி நாயுடு, ராமகிருஷ்ண ரங்காராவ், பி.டி.ராஜன், கூர்மா வெங்கடரெட்டி நாயுடு, சி.ராஜாகோபாலச்சாரி, தா.பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், டி.எஸ்.குமாரசாமி ராஜா, கே.காமராஜ், எம்.பக்தவச்சலம், சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜானகிராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும், சிறுபான்மை சமுதாயத்தினரும் முதலமைச்சர் பதவியில் அமர்ந்து விட்டார்கள். ஆனால் வன்னியர், ஆதிதிராவிடர், அருந்ததியர் ஆகிய பெரும்பான்மை வாக்குவங்கி சமுதாயத்தை சார்ந்தவர்கள் இதுவரை முதலமைச்சராக வர இயலவில்லை அது ஏன் என்று இருசமுதாயங்களும் இதுவரை கேள்வி எழுப்பியதும் இல்லை .


அவ்வளவு ஏன் ஒருநாள் முதல்வராக கூட திரைப்படத்தில் வருவதுப் போல் ஒரு நாள் முதல்வராக கூட இந்த இரண்டு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமரவில்லை. தற்பொழுது ஆளுகிற கட்சியாக இருந்தவர்களும் சரி, ஆட்சியை கைப்பற்றும் கட்சியாக இருந்தாலும் சரி இனிவரும் காலங்களில் அத்தகைய வாய்ப்பை இத்தகைய சமுதாயம் முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது கேள்விகுறியே? ஆட்சி வரவேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது ஆட்சியில் அமர வேண்டும் என்று ஆசைப் படவேண்டும். அப்பொழுது தான் என்றாவது ஒருநாள் அந்த ஆசை நிறைவேறும். இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் வளர்ந்துள்ளது, கல்வி அறிவு உயர்ந்துள்ளது, மக்கள் தொகை எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது ஆனால் ஒருசிலர் ஆசைகள் மட்டும் நிறைவேற்றப்படுகிறது. சிலர் தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தினால் ஆபத்து என்று மனதிற்குள் வைத்துக்கொண்டு புழுங்குகிறார்கள். இனிவரும் காலங்களிலாவது முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்பட வேண்டும்.


- சாமி