தமிழ்நாடு பாஜகவில் புகைச்சல்! நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி!

தமிழ்நாடு பாஜகவில் புகைச்சல்!
நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி!


தமிழ்நாடு பாஜக கட்சி தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் பல மாதங்களாக நிரப்பப்படாமல் இருந்த மாநில தலைவர் பதவிக்கு பல்வேறு தரப்பட்ட அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக பரபரப்பாகவும் உறுதியாகவும் பேசப்பட்ட வந்த நேரத்தில் எல்.முருகன் என்பவர் மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார்.


இவர் மாநில தலைவராக அறிவிக்கப்பட்டதை பெரும்பாலும் எதிர்பாராத ஒரு அறிவிப்பாகவே இந்த அறிவிப்பு என்பது இருந்தது. குறிப்பாக மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் அல்லது சி.பி.இராதாகிருஷ்ணன், எச்.இராஜா மூவரில் ஒருவர் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்து விட்டது. புதிய தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் அவர்கள் தான் பதவி ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திலேயே மாநில நிர்வாகிகளையும் துரிதமாக நியமித்து அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்தே நிர்வாகிகளின் மத்தியிலும் பாஜக தொண்டர்கள் மத்தியிலும் ஒருவிதமான பரபரப்பும் முணுமுணுப்பும் தோன்றியது. பல்வேறு விதமான நிர்வாகிகளின் பின் புலன்கள் மக்கள் செல்வாக்கை பெறமுடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.


தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்துடன் அடியெடுத்து வைக்கும் பாஜக கட்சிக்கு நிர்வாகிகள் நியமனம் என்பது ஒருவிதமான சரிவை ஏற்படுத்திவிட்டது என்றே கூறவேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயமாக விளங்கும் வன்னியர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் என்று பலர் பாஜக வேகமாக இணைந்தார்கள். ஆனால் அவர்களுக்கு மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட பதவிகள் கிடைத்ததாகவும் முதல்கட்ட பதவி எதுவும் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியும் நிலவியது. இதனால் அதிருப்தி அடைந்த பலர் பாஜக கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்ற திட்டம் இட்டு அதற்கான தருணத்தை காத்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.


வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப்பெற்று கருத்து வேறுபாடின்காரணமாக திமுகவில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்த எஸ்.கே.வேதரத்தினம் தனக்கு பதவி வழங்கியபோதும் பாஜக கட்சியை விட்டு வெளியேறி மீண்டும் திமுகழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் தற்போது திமுகவில் இணைந்து விட்டார்கள். இதே போன்று இன்னும் சிலர் பாஜக கட்சியை விட்டு வெளியேறி திமுகவில் இணைவதற்கு விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக கட்சியை வலுப்படுத்துவதற்கு வலுவான திட்டங்களை அகில பாரத கட்சி தலைமை உருவாக்கினால் ஒழிய தமிழ்நாட்டில் பாஜக கட்சி விருப்பம் சுலபமாக நிறைவேறாது. மாநில கட்சிகளின் ஆதிக்கமே தமிழகத்தை பொறுத்தவரை தற்பொழுது உள்ள சூழலலில் பலமிக்கதாக உள்ளது.


- சாமி