மீண்டும் 30 நாள் ஊரடங்கு (ஆகஸ்ட் 31) வயிற்றுப் பசிக்கு என்னவழி

மீண்டும் 30 நாள் ஊரடங்கு (ஆகஸ்ட் 31) வயிற்றுப் பசிக்கு என்னவழி


மீண்டும் ஒரு மாதம் ஊரடங்கு என்ற செய்தி ஏழை எளிய மக்களுக்கு பெரிய அளவில் இழப்பையும், எதிர்கால நம்பிக்கையையும் தகர்த்து விட்டது. தமிழக அரசின் மருத்துவ குழுவினர் கடந்த மாதம் நடைப்பெற்ற ஆலோசனையின் போதே ஊரடங்கு மட்டும் கொரனாவை கட்டுப்படுத்த உதவாது ஆகவே நாங்கள் ஊரடங்கைப் பற்றி அரசிடம் வலியுறுத்தவில்லை . மாற்று வழிகளை கண்டறியும் வழி கூறியுள்ளோம் என்றார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் மத்திய அரசு உள்துறை அமைச்சகமும் சில தளர்வுகளுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கை சில தளர்வுகளுடன் அறிவித்திருந்தது.


மாநிலங்களை பொறுத்தவரை மாநில அரசுகள் சில மாற்றங்களை கடைப்பிடிக்கலாம் என்றும் கூறியிருந்தது அந்த நிலையில் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை 30 நாள் ஊரடங்கை மாநில அரசு அறிவித்துவிட்டது. தற்பொழுது மாநிலம் முழுவதும் கொரனாவின் தாக்கத்திற்கு மக்கள் ஆளாகிவரும் நிலையில் கொரனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே போகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு மாதம் ஊரடங்கை தளர்வுகளுடன் மாநில அரசாங்கம் நீட்டித்திருப்பது மிகப் பெரிய அளவில் ஏழை எளிய நடுத்தர மக்களை பொருளாதார வீழ்ச்சியில் கொண்டுபோய் விடும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.


ஏற்கனவே வாடகை வீட்டில் குடியிருப்பவர்களும், வாடகைக்கு இடம் பிடித்து சிறிய அளவில் தொழில் நடத்திவருபவர்களும் கடந்த 5 மாதங்களாக வாடகை தரமுடியாமல் தொழிலை முறையாக நடத்த இயலாமல் பெரிய அளவில் பாதிப்புள்ளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் மின் கட்டணம், தொலைபேசி கட்டணங்கள், கட்டாயமாக செலுத்தவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு அதற்காக கடன் படவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மிகவும் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள் ஜூலை 31-ம் தேதிக்கு பிறகு பொது ஊரடங்கு முற்றிலும் விலக்கப்படும் என்று ஆனால் மாநில அரசு நிர்வாகமும் மருத்துவ துறைகளும் மண்டல வாரியாக குழு அமைத்து கொரனாவை கட்டுப்படுத்த முயற்சியில் ஈடுபட்டாலும் வாரம் முழுவதும் ஊரடங்கு, இரு வாரங்களுக்கு ஊரடங்கு என்ற நிலைமாறி மாதம் முழுவதும் ஊரடங்கு என்ற நிலைக்கு மக்களை ஆளாக்கி உள்ளார்கள். 


4 மாதங்களுக்கு பிறகும் மீண்டும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நடைமுறைப்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த அறிவிப்பு ஏழை எளிய நடுத்தர மக்களின் பொருளாதார நிலையை பின்னுக்கு தள்ளியதுடன் மீண்டும் எழுவதற்கான வழியை அரசு வெளிப்படுத்தவில்லை . ஆகஸ்ட் மாதம் முழுவதும் உழைத்தால் தான் செப்டம்பர் மாதம் பலன் இருக்கும். தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியும் என்ற நிலை தற்பொழுது முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. பட்டாடை உடுத்தி பட்டாசு வெடித்து மத்தாப்பு கொளுத்தி இனிப்பு பலகாரங்களுடன் இல்லந்தோறும் கொண்டாடி மகிழவேண்டிய தீபவொளி திருநாள் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற சந்தேகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எழுந்துள்ளது.


இதுமட்டுமல்ல இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வருகின்ற பல்வேறு விழாக்கள் பல்வேறு நிகழ்வுகள் அனைத்தும் எதிர்காலத்தில் நடைபெறுமா என்ற சந்தேகம் ஒவ்வொருவர் மனதிலும் அதிர்ச்சியுடன் கூடிய கேள்வியாக எழுகிறது. குறிப்பாக ஆண், பெண் இருபாலருக்கும் நடைபெற வேண்டிய திருமண நிகழ்வுகள் கூட இனிவரும் காலங்களில் ஆடம்பரமாகவும் அமைதியாகவும், நடைபெறுமா என்கின்ற கேள்வி எழுகிறது. மிக குறைந்த அளவிலே சமூக இடைவெளியுடன் அரசின் அறிவிப்பு விதிகளுக்கு உட்பட்டு திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டு பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ஒன்றிணைந்து ஆலயங்களில் தங்கள் வீட்டின் திருமணத்தை ஈ.பாஸ் பெற்றுக்கொண்டு நடத்துவதற்கு முயன்றாலும் ஆலயங்கள் திறக்கப்படாது, திருமண கூடங்கள் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் திருமணங்கள் தள்ளிப்போகும் வாய்ப்பும் ஏற்படுகிறது. ஒரு மாநிலத்திற்குள் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு வாகனம் மூலம் சரக்கு போக்குவரத்திற்கு எவ்வித தடையும் இல்லை. அதே போல் தனிநபர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு ஈ.பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசும் உள்துறை அமைச்சகமும் 3-ம் கட்ட ஊரடங்கை அறிவித்து ஈ.பாஸ் தேவையில்லை கூறியப் பிறகும் மாநில அரசு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கட்டாயம் ஈ.பாஸ் தேவை என்று அறிவித்து நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வாக தெரியவில்லை. மக்கள் அரசாங்கம் தருகின்ற இலவச அரி சியையும் முககவசங்களையும் பெற்றுக்கொண்டு 2 கோடி மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்தாலும் மீதமுள்ள 6 கோடி மக்கள் அரசின் சலுகை எதுவும் இன்றி 5 மாதங்களை கடந்து தங்கள் வாழ்வாதாரத்தை நம்பி எவ்வாறு வாழ முடியும் என்பதை ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் ஒரு தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும்.


அதே போல் கல்லூரி பள்ளிகள், இந்த ஆண்டு எவ்வாறு நடைப்பெறும் என்பதும் ஒரு கேள்விகுறியாகவே ஆகிவிட்டது. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் படுத்தப்படுவதால் மாணவர்களின் எதிர்காலம் என்னாகும் என்கின்ற கவலை பெற்றோர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக் கொண்டே சென்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்து நினைத்துப் பார்த்து வேதனையுடன் எத்தனை நாள் ஆறுதல் அடைவது என்பது மக்களின் கேள்வியாக எழுகிறது.


இந்த நிலையில் அடுத்த ஆண்டு 2021-ல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது.


கடல்வற்றி கருவாடு சாப்பிட காத்திருந்திருந்த கொக்குப் போல் “கொரனா” முடிவுற்று ஊரடங்கு முற்றிலும் விலகி உற்சாகத்துடன் வேலைக்கு செல்வது எப்பொழுது என்ற நிலையில் பொதுமக்கள்.


- சாமி