மேட்டூர் அணையில் இருந்து
48 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு








ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனையடுத்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று முன்தினம் காலை 65ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 50,000 கனஅடியாக சரிந்தது. நேற்று காலை 43ஆயிரம் கனஅடியாக சரிந்த நீர்வரத்து, மாலை 5 மணியளவில் மீண்டும் 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருவியில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதை மூடப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

, மேட்டூர் அணைக்கு 2வது நாளாக நீர்வரத்து விநாடிக்கு 48,000 கனஅடியாக நீடிக்கிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, நீர் திறப்பு இருக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்சரிகையை மீறி சிலர் உபரிநீர் கால்வாயில் பாய்ந்தோடும் நீரின் அருகில் சென்று செல்பி எடுக்கின்றனர். நீருக்கு மிக அருகில் சென்று வேடிக்கை பார்க்கின்றனர். இதை தடுக்க கருமலைக்கூடல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக்கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

- தொகு