இந்த கரிகாலன் குறிவைக்க மாட்டான்!
குறி வைத்தால் தப்பாது
எம்.ஜி.ஆர் பாணியில்! எடப்பாடி பழனிசாமி..! அன்று ஜெயலலிதா கூறியதை
இன்று அறிவித்துள்ளார்…!!



பாஜகவுடன் கூட்டணியை அதிமுக முறித்துள்ளபோதிலும், அதை, அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நேரிடையாக அறிவிக்காதது குறித்து பல கருத்துகள் எழுந்துள்ளன.

பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்துள்ள நிலையில், அதுகுறித்த வீடியோக்களும் பதிவுகளும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - அதிமுகவினருக்கு இடையே சற்று மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்தக் கூட்டணி, முடிவுக்கு வந்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையியில் (செப்.25) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ’பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேவேளையில், அன்றைய பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, பாஜக கூட்டணி முறிவு குறித்து ஆக்ரோஷமாகப் பேசியிருந்தார். அதைத் தற்போது அதிமுகவினரே வைரலாக்கி வருகின்றனர். அந்த வீடியோவில், “இந்த நேரத்தில் நான் உங்களுக்கு ஓர் உத்தரவாதத்தை அளிக்கிறேன். முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். பாஜகவோடு தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டேன். நான் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு என்றைக்கும் உண்டு. அந்த தவறுக்கு பரிகாரமாகத்தான் நானே பாஜக ஆட்சியைத் தவிர்த்தேன். இனி, எந்தக் காலத்திலும் பாஜகவோடு அதிமுக எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாது” எனப் பேசியுள்ளார். மேலும் அவர் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ’சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தைச் சேர்ந்த மோடியா? அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த லேடியா’ எனக் கேள்வியெழுப்பினார்.

ஆனால், அண்ணாமலை மற்றும் பாஜக கூட்டணி விவகாரத்தில் இன்றைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேரிடையாகக் களத்தில் இறங்காமல் தூதர்களை வைத்தே செயல்படுத்துகிறார் என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். அதற்கு உதாரணமாய் அவர்கள் பல சம்பவங்களையும் எடுத்துச் சொல்கின்றனர்.

குறிப்பாக, அறிஞர் அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் பற்றிய பேச்சுக்குப் பிறகுதான் அண்ணாமலை மீது அதிமுகவினர் கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்தனர். ஒருகட்டத்தில் அவரை, மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லிக்கு தூதுவிட்டனர். தவிர, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இது எதுவும் நடக்கவில்லை.

மேலும் இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி, நேரிடையாகக் களத்தில் இறங்கவில்லை. அதேநேரத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நேரிடையாகப் பேசாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்க வைத்தார். அவர்தான் முதலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; இதில் எந்த மாற்றமும் இல்லை’ என தெளிவுப்படுத்தினார். ஆனால் இதற்குப் பாஜக தரப்பு, ’மூத்த தலைவர்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக பொதுச் செயலாளரே சொல்லட்டும்’ என எதிர்வினையாற்றினர். ஆனால், அதற்கு எடப்பாடி எந்தப் பதிலையுமே அளிக்கவில்லை. கடைசிவரை மவுனமாக இருந்துவிட்டார்.

ஆனால் அறிஞர் அண்ணா விவகாரத்தில், ‘தாம் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என அண்ணாமலை தீர்க்கமாக இருந்த நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தம் தரப்பில் இருந்து டெல்லிக்கு தூதுவர்களாக மூத்த நிர்வாகிகளை அனுப்பிவைத்தார். அதிலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாதது டெல்லி தலைமையையே கவலைகொள்ளச் செய்ததுடன் கலக்கத்தையும் ஏற்படுத்தியது. பின்னர், அங்கு நடந்த விஷயங்கள் குறித்தும் எடப்பாடி வாய் திறக்கவில்லை. இந்த நிலையில்தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ளதாக அக்கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் அடிப்படையில் மூத்த தலைவர் கே.பி.முனுசாமியே பேட்டி கொடுத்தாரே தவிர, எடப்பாடி பழனிசாமி பேசவில்லை.

ஆனால் ஆலோசனைக் கூட்டத்தின்போது, ‘இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது; எது வந்தாலும் சந்திப்போம்’ என மா.செக்களிடம் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இப்படி அவர்களிடம் உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி, ’ஏன், ஜெயலலிதாபோல் அவர்களை எதிர்த்து தைரியமாக ஊடகங்களிடம் பேச முன்வரவில்லை. ஒருவேளை, டெல்லியைப் பகைத்துக்கொள்ள முடியாமல்தான் இப்படி தன் ஆதரவாளர்களை வைத்துப் பேசவைத்துள்ளாரா, டெல்லியால்தானே ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கூட்டணி இணைந்தது, அவருடைய ஆட்சி முழுவதுமாக நடைபெற்றது… இதையெல்லாம் அவர் மறந்துவிட்டாரா? இனி, டெல்லி பாஜக என்ன செய்யும்?’ என எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்விகளை கிளப்பி வருகின்றன. அதிமுக பாஜக முறிவுக்கு மேலே குறிப்பிட்ட பல காரணங்கள் கூறப்பட்டாலும் முதல் காரணம் முக்கிய காரணம் 2026 நடைப்பெற போகும் சட்டமன்ற தேர்தல் தான். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தன்னை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக ஆட்சி தான் தமிழ்நாட்டில் அமையும் என்றும் டெல்லியில் உள்ள பாஜக கட்சி தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்த அறிவிப்பு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்-கு முன்பாகவே அறிவிக்க வேண்டும் என்றும், அதிமுக எதிர்பார்த்தது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தி வெளியிட்டார். இது ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளிடத்திலும் தொண்டர்கள் இடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது மட்டும் அல்லாமல் கட்சியின் தலைவர் அண்ணாதுரை குறித்து அண்ணாமலை கூறிய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பார்க்கும் பொழுது அதிமுக தோல்விக்கு பிஜேபி கூட்டணி தான் காரணம் என்ற அளவில் சி.வி.சண்முகம் போன்றவர்கள் பகிரங்கமாக பொதுவெளியில் பேசியதும், அதனை தொடர்ந்து முன்னால் அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜு போன்றவர்கள் விமர்சனம், பாஜக கட்சியை பல விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. இவைகளையெல்லாம் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் அரசியல் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியதால் பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். டெல்லியில் உள்துறை அமைச்சரை சந்திக்கும் பொழுது அமித்ஷா அவர்கள் சில ஆலோசனைகளை கூறும் பொழுது அதை ஏற்க மறுத்து சென்னை திரும்பியவர் கட்சியில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி மூத்த நிர்வாகிகளை டெல்லிக்கு அனுப்பி வைத்து பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் நாங்கள் எடுக்க போகும் முடிவு இதுதான் என்பதை முன்கூட்டியே அறிவித்த போது அவர் எந்தவிதமான ரியாக்ஷனும் தெரிவிக்காத நிலையில் சென்னை திரும்பியவுடன் கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து அதிரடியான முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு எடப்பாடி பழனிசாமி துணிந்து முடிவெடுத்துவிட்டார். இதை கட்சி தலைவர்களும் தொண்டர்களும் வரவேற்று மகிழ்கிறார்கள்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் இருக்கும் நிலையில் இப்படி ஒரு முடிவை அதிமுக எடுத்து இருப்பது எதிரிகளுக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுமோ என்றும் பலர் யோசிக்க தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக சசிகலா, ஒ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் போன்றவர்கள் பாஜக கட்சியின் தலைமையை நெருங்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று இன்னொரு தரப்பினர் கூறுகிறார்கள். தற்பொழுது அகில இந்திய பாஜக தலைமையும், தமிழ் மாநில நிர்வாகிகளும் எதிர்பாராத அதிர்ச்சி ஏற்பட்டு தேர்தல் வரும் நேரத்தில் இப்படி ஒரு முடிவை அதிமுக எடுப்பதற்கு நாம் காரணமாக இருந்து விட்டோமோ, என்று யோசிக்க தொடங்கி அதிமுகவுக்கு எதிராக எந்தவித விமர்சனத்தையும், முன்வைக்க வேண்டாம் என்று கட்சியினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகளான பாஜக கட்சி கிருஷ்ணசாமி புதிய நீதி கட்சி ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வர மாட்டார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

பாஜக கட்சியின் வேண்டுகோளை ஏற்று புதிய அணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒழிய கூட்டணி கட்சிகள் உடைந்து போன அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் உருவாக வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட கூடும். கூட்டணி முறிவால் திமுக கூட்டணிக்கு மகிழ்ச்சி ஏற்படலாம்.

- டெல்லிகுருஜி