காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனு மீது வருகிற 21-ந்தேதி விசாரணை




காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்த வழக்கை கவாய் தலைமையிலான நீதிபதிகள் நரசிம்மா, மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதில் நீதிபதி நரசிம்மா விடுமுறை என்பதால் பட்டியலிடவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. அப்படி என்றால், வேறு ஒரு அமர்வை அமைக்க வேண்டும் என்றால், தலைமை நீதிபதியிடம் முறையிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அமர்வே விசாரிக்க வேண்டும். வரும் திங்கட்கிழமை அல்லது அடுத்த வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அடுத்த வாரம் விடுமுறை எடுக்க இருப்பதாக கவாய் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வருகிற 21-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடாக அரசுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவிட்டிருந்தது.