டெல்லி அவசர சட்ட மசோதா
மக்களவையில் தாக்கல்



டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் மசோதாவை அறிமுகம் செய்து பேசினார். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் எதிர்ப்பு தெரிவித்தார். இது கூட்டாட்சி ஒத்துழைப்பு என்ற கருத்தை மீறுவதாக இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் கூறிய அவர், இந்த மசோதா டெல்லி துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் என்றார்.