செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் மையப்புள்ளியாக செயல்பட்டுள்ளார்- குற்றப்பத்திரிகையில் தகவல்கடந்த 2014-ம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் போன்ற பணியிடங்களுக்கு பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 குற்ற வழக்குகளை பதிவு செய்த நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது 120 பக்க குற்றப்பத்திரிகை மற்றும் 3 ஆயிரம் பக்க வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறை சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தது.

குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு ஆவணங்கள் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த தகவல்கள் வருமாறு:- போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் மூலம் பலரிடம் பெரும்தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக கிடைக்கப்பெற்ற பணத்தை செந்தில்பாலாஜி நேரடியாக பெற்றுள்ளார். அந்த பணத்தை தனது வங்கி கணக்கிலும், தனது மனைவி, சகோதரர் மற்றும் உறவினர்கள் சிலரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். இந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக உதவியாளர்களால் மின்னஞ்சல் மூலம் பகிரப்பட்ட தகவல்களும் கிடைத்துள்ளன.

செந்தில் பாலாஜி திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான டிஜிட்டல் ஆதாரங்களும், ஆவணங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. சட்டவிரோத பண பரிமாற்றத்தில் மையப்புள்ளியாக செந்தில் பாலாஜி செயல்பட்டுள்ளார். சகோதரர், உதவியாளர்கள் மற்றும் சில போக்குவரத்து அதிகாரிகளுடன் சேர்ந்து பணம் ஈட்டுவதற்கான உத்தியை செந்தில் பாலாஜி உருவாக்கி உள்ளார். இந்த முறைகேட்டில் தனக்கு தொடர்பில்லை என செந்தில்பாலாஜி கூறினாலும், அவரது அதிகாரத்தின் கீழ்தான் இந்த முறைகேட்டுக்கான சதி அரங்கேற்றப்பட்டு உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மொத்தம் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன, ஒவ்வொரு பணியிடத்துக்கும் எவ்வளவு பணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது, இந்த பணிக்காக யார், யாரிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது போன்ற விவரங்களுடன் கூடிய பென்சிலால் எழுதப்பட்ட ஆவணங்களும், பென் டிரைவ்களும் கிடைத்துள்ளன.

செந்தில் பாலாஜி தனது சகோதரர் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதற்கான டிஜிட்டல் ஆதாரங்களும் உள்ளன. இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் ஆண்டுகளிலும், அதற்கடுத்த ஆண்டுகளிலும் உள்ள வருமானத்தை ஒப்பிடும் போதும் மிகப்பெரிய அளவில் முரண்பாடு உள்ளது. இதேபோன்று வருமான வரி கணக்கை ஒப்பிட்டு பார்க்கும்போதும் முரண்பாடுகள் உள்ளன. முறைகேடான இந்த பணம் யார் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது? என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. பொது ஊழியரான அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று அதனை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததற்கான அத்தனை ஆதாரங்களும் உள்ளன. இதுபோன்று பல்வேறு தகவல்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.