ஒத்திகை ஓவர்: விண்ணில் பாய தயாராகிறது ஆதித்யா எல்1 - இஸ்ரோ அதிரடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, உலகிலேயே முதல்முறையாக, எந்த நாடும் செய்யாத சாதனையாக, நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது. உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனுக்கு அருகே சென்று ஆராய்ச்சி புரிய, ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. ஆதித்யா-எல்1 என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த விண்கலன் செப்டம்பர் 2-ம் தேதி அன்று காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. விண்வெளியில் சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா-எல்1 இயங்கும்.

சூரியனுக்கு விண்கலன் அனுப்பும் திட்டம் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது நாட்டிற்கே ஒரு புது முயற்சியாகும். பூமியிலிருந்து சுமார் 10 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் ஆதித்யா-எல்1 நிலைநிறுத்தப்பட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். ஆதித்யா-எல்1, கிரகண பாதிப்புகளையும் மீறி சூரியனை தனது பார்வையிலிருந்து மறையாமல் தொடர்ந்து கண்காணித்து, பூமிக்கு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது. "விண்கலனை ஏவுதலுக்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்து விட்டது. ஏவுதலுக்கான தயார்நிலை வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏவுகணை மற்றும் விண்கலன் ஆகியவற்றின் உள்ளே உள்ள அமைப்புகளின் பரிசோதனைகளும் நிறைவு பெற்று விட்டது" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் அறிவித்திருக்கும் இஸ்ரோ, தற்போதைய நிலை குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது. சூரியனின் வெளிப்புற மண்டலமான கரோனாவிலிருந்து வெளிப்படும் வாயு, திடப்பொருள் வெளியேற்றம், மின்காந்த வெளியேற்றங்கள், அவற்றின் குணாதிசயங்கள் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக ஆதித்யா-எல்1 அனுப்பப்படுகிறது.