திரௌபதி அம்மன் ஆலய வழிபாட்டில் இருசமுதாய மக்களிடம் மோதல் ஏன்…? முதல்வர் மு.க.ஸ்டாலின்
தீர்வு காண்பாரா..!



கடவுள் மறுப்பு என்பதும் கடவுளை ஏற்றுக்கொள்வதும் ஒவ்வொரு தனிமனிதர்களுடைய விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விஷயமாகும். ஒரு ஊரில் ஆலையத்தை நிர்மாணம் செய்து அதை தங்கள் ஊர் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆலய தரிசனம் செய்வதும், அம்மனை வழிபட்டு வருவதும் கால காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். இதற்கு சாதி, மதம், மொழி, இனம் என்று பாகுபாடு கிடையாது. அவரவர் விருப்பம் போல் ஆலயத்தை வழிபடுவதும், அம்மனை வழிபடாமல் தவிர்ப்பதும் தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் நிகழ்வாகும். அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம். அனைத்து ஆலயங்களிலும் அனைவரும் சமமாக சாமி தரிசனம் செய்யலாம். ஆலயம் பிரவேசம் செய்யலாம் என்று அரசாங்கம் உத்தரவு போட்டிருந்தாலும் அந்தந்த ஊர் மக்கள், கிராமத்தில் வசிப்பவர்கள் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு ஒற்றுமை உணர்வோடு ஆலய தரிசனம் செய்வதும், கடவுள் வழிபாடு செய்வதும் முறையாக நடைபெற்று வருகின்ற பொழுது மதத்திற்கு ஏற்றவாற்வாரு சாதிக்கு ஏற்றவாரு அவரவர்கள் வசிக்கும் பகுதிகளில் அவரவர்களுக்கு உள்ள குலதெய்வத்திற்கு ஆலயம் அமைத்து வழிபாடு செய்வது கால காலமாக நடைமுறையில் உள்ள நிகழ்வாகும்.

வன்னியர் மற்றும் தலித் பட்டியலின மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் இதுபோன்ற நடைமுறைகள் காலகாலமாக இருந்து வருகின்றது. இவர்கள் வசிக்கின்ற பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் தர்க்காவை அமைத்து வழிபட்டு வருவதும், கிருஸ்துவ தேவாலயங்களை தோற்றுவித்து கிறிஸ்துவர்கள் வழிபட்டு வருவதும், இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்ற ஒரு வழக்கமாகும். அதே நேரம் தமிழ்நாட்டில் பெருபான்மையினராக வசிக்கும் வன்னியர்களோ அல்லது ஆதிதிராவிடர் மற்றும் தலித் போன்ற பட்டியலினத்தவர்களும் இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலமான மசூதிக்கோ அல்லது தர்க்காவிற்கோ, சென்று வழிப்படுவதற்கு விரும்புவதில்லை. அதே போல் கிறிஸ்துவர்கள் வழிபாட்டு தலமான தேவாலயம் அல்லது சர்ச் போன்ற கோவில்களுக்கு வழிபாடு செய்வதற்கு வன்னியர்களோ பட்டியலினத்தவர்களோ போக விரும்புவதில்லை.

ஆனால் நாகூர்தர்கா மற்றும் வேளாங்கன்னி மாதா கோவில் போன்ற இடங்களில் குறிப்பாக திருவிழா காலங்களில் அனைத்து மதத்தினரும், அனைத்து சாதியினரும் சென்று வருவது உண்டு. அதே நேரம் ஆலயத்தில் வழிபாடு நடத்துகின்ற முறை கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரிமையாக இருந்து வருகிறது. இதையும் கடந்து அரசியல்வாதிகள் கிறிஸ்துவர் விழாக்களில் பங்கேற்பதும், இஸ்லாமியர்கள் நடத்தும் நோன்பு காலங்களில் அதில் பங்கேற்று உரையாற்றுவதும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிகழ்வாகும்.

குறிப்பாக திராவிட இயக்கத்தினர் கடவுள் மறுப்பு கொள்கையில் அதிக தீவிரம் கொண்டவர்களாக இருந்தாலும் இந்து ஆலயங்களுக்கு சென்று வருவதும் வழிபாடு நடத்துவதும், அர்சசனை செய்வதும் இருந்துக் கொண்டு தான் வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயத்தில் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் ஆலயப்பிரவேசம் செய்ததாகவும், அவர் வேண்டுமென்றே தனி ஆளாக ஆலயத்திற்கு சென்றதால், ஒரு தனிப்பட்ட சமுதாயத்திற்கு சொந்தமான ஆலயம் என்பதால் அந்த ஆலயப்பிரவேசம் செய்தவர் பட்டியலினத்தவர் என்பதால் ஆலயம் வன்னியர்களுக்கு சொந்தம் என்று இருப்பதால் மேலும் விழா நடைபெற்று கொண்டிருக்கும் போது இதுபோன்ற நிகழ்வை தவிர்க்க வேண்டும் என்று ஆலயத்திற்கு நுழைந்த பட்டியலின வகுப்பை சேர்ந்தவரை தகாத வார்த்தைகளால் திட்டி செய்த தவறுக்கு அவர் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும், புகார்கள் எழுந்துள்ளன.

மேல்பாதி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களும், வன்னிய சமுதாய மக்களும் காலம் காலமாக சகோதர பாசத்தோடு ஒற்றுமை உணர்வோடும், ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு பழகி வந்துள்ளார்கள். விழா காலங்களில் ஆலயத்திற்கு தங்களால் ஆன நிதி உதவிகளை செய்ததோடு ஆலய தரிசனமும், திரௌபதி அம்மனை வழிபடுவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த வாரம் திடீரென சாதி மோதலுக்கு வழிவகுத்து ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்ளும் நிலைமைக்கு சென்று பட்டியலினத்தவர் தாக்கப்பட்டதாக புகார் கூறி இரண்டு சமுதாய மக்கள் குள்ளும் அது கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாக ஏற்பட்டுள்ளது. இதில் அரசு தலையீட்டு அதிகாரிகள் மூலம் ஆலயத்திற்கு பூட்டு போட்டு பிரச்சனையை மேலும் பெரிதாக்குகின்ற வகையில் செயல்பட்டு இருப்பதால் இரண்டு சமுதாய மக்களும், எந்த நேரமும் மோதிக்கொள்ளும் வகையில் ஒருவருக்கு ஒருவர் ஆலயத்திற்கு உரிமை கொண்டாடுவதில் முனைப்பு காட்டுகிறார்கள். உண்மை நிலவரம் தர்மராஜா, திரௌபதி அம்மன் ஆலயம் என்பது வரலாற்று ரீதியாகவும், வழிபாட்டு முறைப்படியும் வன்னியர்களுக்கு உரிமையானதாகவும், ஆலயம் வன்னியர்கள் சொந்த செலவில் விருப்பப்பட்டு தொடர்ந்து வழிபாடு செய்து வருவதாகவும், இதில் தேவையின்றி அரசியல் தலையீடு இருப்பதால் குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் (கா.பொன்முடி) தலையீடு இருப்பதால் இதுபோன்ற மோதல்களுக்கு காரணமாக இருப்பதாக வன்னியர் தரப்பு மக்களின் வாதமாக சொல்லப்படுகிறது.

அதே நேரம், பட்டியலினத்தவரை தேவையில்லாமல் தாக்குதல் நடத்தியதால் இந்த கலவரத்திற்கு காரணமாகி விட்டது என்று பட்டியலின மக்கள் காரணம் கூறுகிறார்கள். மேலும் ஆலயத்திற்கு வரி கொடுப்பதில் இருந்து அம்மனை தரிசனம் செய்வது வரை எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், காலனியில் வசிக்கும் பட்டியலின பெண்கள் கூறுகிறார்கள்.

ஆலய வழிபாட்டில் அரசியல் புகுந்ததால் தேர்தல்களில் எதிர்வினையாற்றுவதும், வாக்குகளை பதிவு செய்வதில் பிளவு ஏற்படுவதும் உருவாகும் சூழல் நிலவுவதால் இதுபோன்ற விஷயங்களில் அரசு இருசமுதாய மக்களிடமும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன் ஆலயத்திற்கு போடப்பட்டுள்ள பூட்டை திறந்து வன்னிய சமுதாய மக்களிடம் நன்மதிப்பை பெறுவது மிக மிக அவசியம் என்கிறார்கள் ஊர் பெரியவர்கள். இதில் தொடர்ந்து ஆலயம் பூட்டப்பட்டிருந்தாலும் குழப்பம் நீடித்துக் கொண்டு இருந்தாலும் காவல்துறை பாதுகாப்புக்கு நின்றாலும், தமிழகத்தில் வசிக்கும் பல மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே ஏற்படக் கூடிய அபாயத்தை முதல்வர் தலையிட்டு தீர்வுகாண வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகிறது.

- நிருபர் குழு