தமிழகத்தில் பா.ஜ.க நடத்தும்
மக்கள் சந்திப்பு இயக்கம்



சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது. அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் இன்று சென்னை வருகிறார். மாநில தலைவர் அண்ணாமலையுடன் நிருபர்களை சந்தித்து ஒரு மாத பிரசார திட்டங்களை அறிவிக்கிறார்கள். நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது. இந்த சந்திப்பின்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு மூலம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விளக்குகிறார்கள். பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தி இவற்றை பிரசாரம் செய்வது, சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுவது, தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள். இது தவிர வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள். இதற்கான திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.