கர்நாடக தேர்தலில் தலைவர்கள்
உச்சகட்ட பிரச்சாரம்!




பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. பெங்களூருவில் உணவு விநியோகம் செய்யும் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்து ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இன்று அவர் பேருந்தில் பயணித்தார். பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுடன் உரையாடிய ராகுல்காந்தி, பேருந்தில் இளம் தலைமுறையுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்கள் உற்சாகத்துடன் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ராகுல்காந்தியை தொடர்ந்து சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு விஜயா நகர் என்ற இடத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் சி.வி. ராமன் நகர தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மேளம் தாளம் முழங்க ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக தமிழக எம்.பி. ஜோதிமணியும் பரப்புரை மேற்கொண்டார். இதேபோல் காந்தி நகர் சட்டமன்ற தொகுதியிலும் பிரச்சாரம் களைகட்டியது. ஏற்கனவே 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தினேஷ் குண்ராவ், இந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார். அவருக்காக திருவிழா போல திரண்டு மக்கள் ஆதரவு அளித்தனர்.