கர்நாடக சட்டசபை தேர்தல்: அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு- ஓ.பி.எஸ். தரப்பு மனு நிராகரிப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு போட்டியாக அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டார். புலிகேசி நகர் தொகுதி மற்றும் கோலார் தங்க வயல் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார். இந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. இதில் அ.தி.மு.க. சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. மேலும் ஓ.பி.எஸ். தரப்பில் கோலார் தங்க வயல், புலிகேசி நகர் தொகுதியில் நிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாததால் மனுவை நிராகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், அதிமுக வேட்பாளர் மனு ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.