அதிமுகவுக்கும் - அண்ணாமலைக்கும், எந்த தகராறும் இல்லை- எடப்பாடி பழனிசாமி



அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வாகி இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார்.

டெல்லியில் அமித் ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க. தலைவர்களும் டெல்லியில் தங்கிய நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினோம். இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய தலைவர் நட்டாவும் இருந்தார். இது சம்பிரதாயமான சந்திப்பு தான். நாங்கள் 5 மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசிவிட்டு சென்றோம். அதன் அடிப்படையில் மீண்டும் சந்தித்து பேசி உள்ளோம். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 1 ஆண்டு காலம் இருக்கிறது. 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தோம். அந்த கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது. ஈரோடு சட்டசபை இடைத்தேர்தலிலும் தொடர்ந்தது. எனவே பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

எனக்கும், அண்ணாமலைக்கும் கருத்து மோதல் இருக்கிறது என்பது தவறான கருத்து. எங்களுக்கும், அண்ணாமலைக்கும் எந்த வித தகராறும் கிடையாது. அப்படி இருந்தால் ஈரோட்டில் எப்படி அவர் பிரசாரம் செய்வார். அ.தி.மு.க.வுக்கும், பாஜகவுக்கும் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு கேள்வி கேட்காதீர்கள். உள்நோக்கத்துடன் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்? ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின்படி அவர்கள் செயல்படுவார்கள். கூட்டணி என்று வருகிறபோது நாங்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதுதான் அ.தி.மு.க.வின் கொள்கையாக இருந்து கொண்டிருக்கிறது.