அம்மை, வியர்க்குரு… வெயில் கால நோய்களுக்கு சித்த மருத்துவம்



வெயில் காலம் என்று சொல்லக் கூடிய கோடை காலத்தில் அம்மைநோய், குடற்புண்கள், மூலம், பவுத்திரம், சிறுநீரக தொற்று, வியர்க்குரு, மஞ்சள் காமாலை, தூக்கமின்மை, மலக்கட்டு போன்றவை அதிகமாக காணப்படும். தொற்று நோய்கள் என்பவை உணவு, குடிநீர், காற்று மற்றும் தொடுதல் மூலமாக வைரஸ் கிருமிகள் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு பரவி குறி குணங்களை ஏற்படுத்தும். சித்த மருத்துவத்தில் பலவித தொற்று நோய்கள் பற்றிய குறிப்புகளும், அந்நோய்களுக்கு மருத்துவ தீர்வுகளும், நோய்கள் ஏற்படாமல் இருக்க தற்காப்பு முறைகளையும் விரிவாக கூறப்பட்டுள்ளன. கோடை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையாக விளங்குவது அம்மை நோயாகும்.

அம்மை நோய் நோய் வரும் வழி நோயாளியின் அம்மைக் கொப்புளங்களிலும், சளியிலும் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். நோயாளி இருமும் போதும், தும்மும்போதும் காற்றில் பரவுவதாலும், அவர்களின் உடைமைளை கையாள்வதன் மூலமும் இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவும். இதனால்தான் அம்மை நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த நடைமுறை பல ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அம்மை நோயில் பெரியம்மை, சிறியம்மை, பூட்டுத்தாளம்மை, தட்டம்மை என பல வகைகள் உண்டு. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோயும், பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரசால் பூட்டுத்தாளம்மையும், ரூபியோலா வைரசால் தட்டம்மையும் ஏற்படுகிறது.

மேலும் வைரஸ் தடுப்பு மூலிகைகள், வேப்பிலை, துளசி இலைகளை படுக்கை தலைமாட்டில் மற்றும் வீட்டின் வாசலில் சொறுகி வைக்கலாம். மேலும் படுக்கை விரிப்புகள் மஞ்சள் கலந்த நீரில் முக்கி நிழலில் உலர்த்தி தினசரி தலையனை உள்பட மாற்றவேண்டும். நீர்ச்சத்து குறையாமல் இருக்க பழச்சாறு, இளநீர், நீர், மோர் கொடுக்கலாம். மலக்கட்டு இல்லாமல் இருக்க திரிபலா சூரணம், மாத்திரை அல்லது கடுக்காய் சூரணம் மருத்துவர் ஆலோசனை பெற்று கொடுக்கலாம். மேலும் வேப்பிலை, துளசி, மஞ்சள், சந்தனம் நான்கையும் வேண்டிய அளவு எடுத்து சேர்த்து அரைத்து மேற்பூச்சாக பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் தீவிரம் குறைந்து விரைவில் குணமடையும், தழும்பு ஏற்படாது. வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் அம்மை நோய்கள் பரவாமல் தடுக்கவும் சித்த மருத்துவம் கூறும் அறிவுரைகள்: உணவில் அதிக அளவு தயிர், மோர், கீரை, காய்கறிகள், மலை வாழைப்பழம் தர்பூசணி, இளநீர், கரும்புச்சாறு, பழைய நீராகாரம், வெள்ளரிப்பழம், முலாம்பழம், கருப்பு திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்கள் உட்கொள்ள வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மிகவும் நல்லது. நீராகாரம், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்றவற்றை தயிர், மோர் சேர்த்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இளநீர், நுங்கு, வெட்டிவேர் மற்றும் நன்னாரி ஊறவைத்த குடிநீர், நெல்லிக்காய் ஊறல் குடிநீர் ஆகியவற்றை அருந்த வேண்டும். அதிக காரம், புளிப்பு, மசாலா அடங்கிய உணவுகள், கேக், பிஸ்கட், பரோட்டா போன்ற மைதா மாவினால் செய்த உணவு தின்பண்டங்கள், துரித உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும், சூடாக எதையும் கொடுக்க கூடாது. காட்டன் வகை ஆடைகள் அணியவேண்டும். இருக்கமாக ஆடை அணியக்கூடாது, உள்ளாடைகளை தவிர்ப்பது நல்லது.

 மண்பானையில் தண்ணீர் வைத்து குடிக்கவும். துரித உணவு, பதப்படுத்தி பாக்கெட் மற்றும் டின்களில் அடைத்து வைத்து விற்கப்படும் அனைத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அடிக்கடி டீ குடிப்பதை தவிர்த்து பழச்சாறு பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். மது, புகையை குறைக்கலாம் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். போதிய அளவில் உறக்கம், ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலாக மனது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.