பிரதமர் மோடி நாளை வருகை:
சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்புசென்னை : சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) மின்னல் வேக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் அவர், விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அவர் ஹெலிகாப்டரில் போர் நினைவு சின்னம் அருகே உள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் செல்கிறார். அங்கு அவர் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து காரில், மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம் சென்று ராமகிருஷ்ணா மடம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமரின் இந்த நிகழ்ச்சிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் ஆலோசனை நடத்தினார். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு முக்கிய ஆலோசனைகள் வழங்கினார். பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. அவர் செல்லும் இடங்களில் வழி நெடுக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். இதற்காக 22 ஆயிரம் போலீசார் நாளை சென்னையில் குவிக்கப்படுகிறார்கள்.

போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தலைமையில் அனைத்து கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை போலீசார், கமாண்டோ படையினர் என போலீஸ் பட்டாளமே பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வாகன சோதனை மற்றும் போலீஸ் ரோந்தும் நேற்று இரவு முதல் தீவிரமாக்கப்பட்டது.