ராகுல்காந்தி அவதூறு பேசியதற்காக பதவி பறிக்கப்பட்டதா? பிரதமர் மோடிக்கு சவாலாக இருப்பதால் இந்த தண்டனையா…?
பாரத் ஒற்றுமை பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி அரசியல் ரீதியாக இந்தியா முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்ததோடு பாஜக கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் பெரும் சவாலாக இருந்தார் என்றே கூறலாம். இது மட்டுமல்ல நாடாளுமன்றத்தின் ராகுல்காந்தியின் உரை பிரதமர் மோடி அவர்களையும், பாஜக கட்சியையும், பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்க கூடும் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பேசும் பொருளாக அமைந்துள்ளது. டீக்கடையில் தொடங்கி, இந்தியாவில் உள்ள குக்கிராமங்கள் வரை ராகுல்காந்தி குறித்த பேச்சு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் (2024) மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், காங்கிரஸ் கட்சியின் பலத்தை உறுப்படுத்துகின்ற அளவில் பாரத் ஜூடோ நடைப்பயணம் அமைந்துள்ளது.

குறிப்பாக அதானி குழும நிறுவனங்கள் குறித்து அதில் நடைபெற்ற மோசடிகள் குறித்து இன்டன் பர்க் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியீட்டு இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திடியதுடன் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப் பெரிய அளவில் சரிவை சந்தித்ததுடன், இன்றும் பங்கு சந்தையில் சரிவை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தாக்கமும், ராகுல்காந்தியின் மீது மத்திய அரசுக்கு கோபம் வருவதற்கு காரணம் ஆகிவிட்டது என்றே கூறலாம்.

பிரதமர் மோடி அவர்கள் குறித்தும் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற ராகுல்காந்தி பேசினார் என்று குஜராத் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்தது. நீண்டநாட்களுக்குப் பிறகு அந்த வழக்கு தீர்ப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ராகுல்காந்திக்கு தண்டனை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உடன் அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது என்பதை பார்க்கும் பொழுது இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றாலும் இதற்கு முன் தண்டனை பெற்ற பலர் ஊழல் குற்றச்சாட்டிற்காக தண்டனைப் பெற்று பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ராகுல்காந்தியை பொறுத்தவரை அவர் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இடம் பெறாத நிலையில் அவதூறு வழக்கிற்காக அவர் தண்டனை பெற்றுள்ளார். மேலும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளப்படி முப்பது நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது. இப்படி பட்ட நிலையில் ஏன் அவசர அவசரமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிறது என்பதை பார்க்கும் பொழுது இதற்கு சரியான பதிலை மக்கள் மன்றத்தில் தான், ராகுல்காந்தி அவர்கள் தேட வேண்டும்.

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் உறுப்பினர்களை அனுப்பி வைக்கும் பொறுப்பு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு தான் அதிகாரம் உள்ளதே தவிர, எந்த ஒரு தனிமனிதருக்கும் இப்படிப்பட்ட அதிகாரம், சட்டத்தால் வழங்கப்படுவதில்லை. ஆகவே ராகுல்காந்தி அவர்கள் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் எந்தவித தியாகத்தை செய்வதற்கும், அதற்காக என்ன விலை கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதுடன், தாங்கள் ஏன் ஒன்றுப்பட வேண்டும் என்ற ஒரு நிலைக்கு வந்துள்ளார்கள் என்பதையும், பார்க்க முடிகிறது. இந்த தீர்ப்பின் மூலம் ராகுல்காந்தி அவர்கள் இன்னும் சில ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், பிரதமர் பதவியையும் அவர் வரமுடியாது என்பதால் இந்த சந்தர்ப்பம், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எதிர்கட்சிகள் இந்தியா முழுவதும் பாஜக கட்சிக்கு எதிராக ஓர் அணியில் திரள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.

மக்கள் மன்றத்தில் உண்மையை பேசியதற்காக பழிவாங்கப்பட்டிருக்கிறார் ராகுல்காந்தி எனவும், ஜனநாயகத்தை காக்க சிறைக்கும் செல்வோம் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகா அர்ஜுனா கார்கே. இது திட்டமிட்டு செய்யப்பட்ட தகுதிநீக்கம் என்கிறார் திருநாவுக்கரசு எம்.பி., ஒன்றிய அரசின் யதோச்சார போக்கை காட்டுகிறது இது பழிவாங்கும் நடவடிக்கை. தேர்தலில் போட்டியிட விடாமல் செய்ய சதி திட்டம் இது என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்ததன் மூலம் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கு வெளிப்படையாக தெரிகிறது என்கிறார் திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி. 2024 தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறுகிறார். அரசியலில் இருந்து ராகுல்காந்தியை ஒதுக்குவதற்காகவே பாஜக அரசு இவ்வாறு செயல்பட்டுள்ளது என்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. ஒன்றிய பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்கு வேறு எந்த காரணமும் தேவையில்லை. இது உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன். ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்ததை பழிவாங்கும் நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன் என்கிறார் மார்க்சிட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேசியதற்கே ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்திருக்கிறார்கள் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆனால் பேரவையில் ஜனநாயக முறைப்படி எதிர்கட்சியினரை தாங்கள் பேச அனுமதிக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை இந்தியா கண்டுள்ளது, என மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.

ராகுல்காந்தியின் தகுதி நீக்கம் குறித்து, தொடர்ந்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசித்து வருகின்ற நிலையில் மத்திய அரசை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ்காரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருவதுடன் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொண்டு பாஜக கட்சிக்கு எதிராகவும் பிரதமர் மோடியை எதிர்த்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், இந்தியா முழுவதும் உள்ள எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜக கட்சி எதிராக அணி திரட்டி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்கிற ஒரு மெகா திட்டத்தையும் எதிர்கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையும் கடந்து மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சி அமைந்தால் எத்தகைய மாற்றங்களை கொண்டு வரும் என்பதை நினைத்து பார்க்கும் பொழுது அச்சப்படாமல் இருக்க முடியாது.

சட்டம் தன் கடமையை செய்யட்டும். மக்கள் மன்றம் நல்ல தீர்ப்பை எழுதட்டும். சாதாரண மனிதருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மட்டுமே ராகுல்காந்திக்கும் கிடைக்கும் என்கிறார் தமிழ் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.

- டெல்லிகுருஜி