சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல் களம்..!



அதிமுக அதிகாரப்பூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற்று எப்படியும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரை தோல்வியடைய செய்யவேண்டும் என்று சூழன்று சூழன்று பணியாற்றுகிறார்கள் செங்கோட்டையின் தலைமையில். இதற்கு ஆதரவாக வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்பட 40க்கும் மேற்பட்ட முன்னணி தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றுகிறார்கள். அதே போல் திமுக சார்பிலும் செந்தில்பாலாஜி, முத்துசாமி, சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நேரு, ஐ.பெரியசாமி போன்றவர்கள் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் நின்று களமாடுகிறார்கள். திமுகவினரை உற்சாகப்படுத்தவதற்கு 24, 25 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ்காரர்களை உற்சாகப்படுத்தவதற்கு மாநில தலைவர் அழகிரி தலைமையில் காங்கிரஸ் முன்னணி தலைவர்களும், தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் களத்திற்கு வர இருக்கிறார்கள். அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வரும் இன்றைய எதிர்கட்சி தலைவருமான அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். தற்போதைய கள நிலவரம் இரண்டு கட்சிகளுக்கும் சமவாய்ப்பில் இருந்து வரும் நிலையில் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சி வேட்பாளரும் களத்தில் கடுமையாக போட்டி போட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிக்காக அதிமுகவும், திமுகவும் கடுமையாக போராடி வருகின்றனர். வாக்காளர்களை கவரப்போவது இரட்டை இலை சின்னமா, அல்லது கை சின்னமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதிமுக வெற்றிப் பெற்றால் அது செய்தியாகும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அது பேசப்படும்.

- டெல்லிகுருஜி