புதுவை சட்டசபையில்
மானிய விலையில் உணவுபுதுச்சேரி: புதுவை சட்டசபையில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பார்ப்பதற்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அந்தந்த தொகுதி மக்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். சில நேரங்களில் முதலமைச்சர், எம்.எல்.ஏ.கள் வருவதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் கிராமத்தில் இருந்து வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. அப்போது அவர்களுக்கு அப்பகுதியில் மதிய உணவு கிடைக்காததால் உணவின்றி அங்கேயே காத்திருக்கின்றனர். மேலும் சிலர் சிறிது தூரம் சென்று ஓட்டல்களில் அதிக பணம் கொடுத்து உணவு சாப்பிட்டு விட்டு வருகின்றனர்.

இதனால் ஏழை, எளிய மக்கள் சிரமப்படுகின்றனர். ஆகையால் சட்டசபை வளாகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையேற்று முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபை வளாகத்தில் உணவகம் அமைப்பதற்கு அனுமதி அளித்தார். மேலும் இதனை அமைத்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து செஞ்சி சாலையில் உள்ள சட்டசபையின் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.10 லட்சத்து 63 ஆயிரம் செலவில் புதிதாக உணவகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு பொதுமக்கள், சட்டசபை ஊழியர்கள் என அனைவருக்கும் மானிய விலையில் உணவு விற்பனை செய்வதற்கு டெண்டர் விடப்படுள்ளது. விரைவில் இப்பகுதியில் உணவகம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.