பலன்களை தரும் பாத யாத்திரை!
அன்பு மிகுதியான நிலையே பக்தி. கடவுளின் மீதான அன்பு பக்தியாக மாறுவதும், அந்த பக்தி காதலாக மாறுவதும் நாம் பல பக்தர்களிடம் கண்டதும் கேள்விப்பட்டதும் உண்டு. அப்படி சிவனின் மீது காதல்கொண்ட தென் தமிழகத்தைச்சேர்ந்த ஒரு பெண், 'மணந்தால் சிவனைத் தான் மணப்பெண் இல்லையேல் உயிர் துறப்பேன்' எனத் தவமிருந்தாள். அவளது பக்தியின் தீவிரம் கண்டு மனமிறங்கிய சிவன், தென்னகத்தை நோக்கி வருகிறார். சூரிய அஸ்தமனத்திற்குள்ளாக வராவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என்ற அந்தப்பெண்ணைக் காண அவர் வந்துகொண்டிருந்தபோது, சுற்றத்தார் இவளிடம் சூரிய அஸ்தமனம் ஆகிவிட்டதாக காண்பித்து உயிரை மாய்த்து கொள்ளச் செய்தார்கள்.
இத்தனை அன்பாக இருந்த ஒரு உயிர் போக காரணமாகிவிட்டோமென்ற மன வருத்தத்தில் அவர் அமர்ந்த மலை வெள்ளியங்கிரி மலை. அப்படி சிவபெருமான் அமர்ந்து சென்றதால் இந்த வெள்ளியங்கிரி மலை, 'தென்கயிலாயம்' என்றழைக்கப்பட்டு சக்திமிக்க திருத்தலமாக, திருக்கோயிலாக வீற்றிருக்கிறது. இந்த மலைக்கு ஒவ்வொரு வருடமும் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஆனால் இத்தகைய சக்திமிக்க தலத்திற்கு சுற்றுலா செல்வதைப்போல் சென்று வராமல் தகுந்த உடல். மன நிலையோடு அருளை உள்வாங்கிக் கொள்ள ஏதுவாய் மலை ஏறி வரும்போது, தங்களின் வாழ்க்கையே மாறுகிறது என்று பலரும் ஆனந்த கண்ணீரோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் தென்கைலாய பக்திப் பேரவை நடத்தும் இந்த சிவாங்கா யாத்திரையில் கலந்துகொள்ள பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர். இருவேளை உணவு, சிவ நமஸ்காரம் எனும் யோகப் பயிற்சிஉள்ளிட்ட செயல்முறைகளோடு மிகத் தீவிரமான பக்தியில் இருக்கின்றனர். வழக்கமாக புனித தலங்களுக்கு செல்லும்போது இரண்டு நாள் தினசரி வேலைகளுக்கு விடுப்பு கொடுத்து பேருந்து, கார் என எதிலாவது பயணித்து அரக்கப்பரக்க கோயில்களுக்கு சென்றுவிட்டு திரும்புவது வாடிக்கை. ஆனால் திருத்தலங்களுக்கு செல்வதற்குமுன் முறையாக விரதமிருந்து, அருளைப் பெற நம்மை நாமே தயார் செய்துகொண்டு வேலை, தொழில், குடும்பம் என எல்லோருக்கும் போல கடமைகள் இருந்தாலும், அவற்றை இரண்டாம்பட்சமாக்கி, பல நாட்கள் பாத யாத்திரையாக கோயில்களுக்கு செல்வதும் நமது கலாச்சாரத்தில் இருக்கின்றது.
சிவாங்கா விரதத்தில் பாதயாத்திரை என்பது கட்டாயம் இல்லை என்றாலும் பலரும் எதற்காக விரும்பி பாத யாத்திரையை தேர்ந்தெடுக்கிறார்கள்? பாத யாத்திரை என்பது மிகுந்த தொலைவை நடந்து கடக்கும்போது ஏற்படும் உடல் வலி, 12 மணிக்கு மேல் தான், அதுவும் இருவேளை உணவுதான் உண்ணவேண்டும் ஆகிய கட்டுப்பாடுகளை பின்பற்றி பசி, வலி உள்ளிட்ட உடல் தேவைகளை தாண்டிச் செல்வது, வாழ்க்கையை முற்றிலும் வேறு பரிமாணத்தில் பார்க்க வழிசெய்கிறது. அவர்களுக்கும் நம்மைப்போல சாதாரண வாழ்க்கை சூழல்தான் என்றாலும் 500 முதல் 700 கிலோ மீட்டர்கள் 20 நாட்கள், 30 நாட்கள் என நடந்தே வருவது. நம்மால் முடியாது என ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் நம்மை மனித இனத்திற்கான உச்சபட்ச சாத்தியங்களை நோக்கி நகர்த்துகிறது இந்த ஆன்மீக சாதனை. இதுவே நமது தனிப்பட்ட வாழ்க்கையில், நமது நலம், வளம் என நமக்கு தேவையான எல்லாமே கிடைக்கவும் துணைபுரிகிறது. நம் அன்றாட வாழ்க்கைக்காக நாம் வாழ்க்கை முழுக்க இயங்கிக்கொண்டே தான் இருக்கிறோம். அதிலேயே நமது மன நலம், உடல் நலத்தை இழந்து கடமையே என்று வாழ்ந்துவருகிறோம். அறுபது எழுபது வருடங்கள் இப்படியே ஓடியோடி இறுதியில் ஒன்றுமே கிடைக்காதைப் போல வருந்தி வாழ்க்கையை நிறைவுசெய்கிறோம். காலகாலமாய் கூட்டம் கூட்டமாக செய்துகொண்டிருக்கும் இந்த சடங்கு போலான சலிப்பான வாழ்க்கையிலிருந்து பாதையை மாற்றி நமது உள்நிலையை கவனித்தால்தான் புறச்சூழலும் நன்றாக அமையும் என்பதை உணர்ந்த பலரும் இந்த சிவாங்கா விரதத்தை மேற்கொண்டு, அளப்பரிய பலன்களை பெறுகிறார்கள். பல நாட்களாக இருந்த உடல் உபாதைகள், குடும்ப வாழ்வின் குழப்பங்கள், பொருளாதாரம் என எல்லாமே நமக்கு வேண்டியதைப்போல கிடைத்தன என்று பலரும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனை உணர்ந்து அனுபவித்த அவர்கள் ஒவ்வொரு வருடமும் திரும்பத் திரும்ப சிவாங்கா யாத்திரை வருவதைப் பார்ப்பதே சிலிர்ப்பானதொரு பக்தி அனுபவமாக இருக்கிறது.