ஈரோடு இடைத்தேர்தல்- சீமான், அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் ஈரோட்டில் முகாமிட்டு இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து 2 நாள் பிரசாரத்தை தொடங்கினார். முதல் நாளான நேற்று மாலை பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்கள் மத்தியிலும், வீதிவீதியாகவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை 2-வது நாளாக அண்ணாமலை பிரசாரத்தை தொடங்குகிறார். வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து ஓங்காளியம்மன் கோவில் மற்றும் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பொதுமக்கள் மத்தியில் பேசி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே கடந்த 13, 14, 15 ஆகிய நாட்களில் முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை தனது 2-வது கட்ட பிரசாரத்தை சீமான் தொடங்குகிறார். இன்று மாலை சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள தேர்தல் பணிமனையில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து குமலன் குட்டை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை கொல்லம்பாளையம் பகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார் . 22-ந் தேதி வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம், 23-ந்தேதி கருங்கல்பாளையம் பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து 24, 25-ந் தேதிகளிலும் இறுதிகட்ட பிரசாரம் செய்கிறார்.

இதேபோல் தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மத்தியிலும் பேசினார். அதனைத்தொடர்ந்து 2-வது நாளாக தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இதனைத் தொடர்ந்து வரும் 24 மற்றும் 25-ந் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். தலைவர்கள் முற்றுகையால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.