ஓ.பன்னீர்செல்வம் 20-ந்தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை:
சென்னை: அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை வழி நடத்தி செயல்பட்டு வருகின்றனர். ஆனாலும் தற்போது வரை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்களும் தலைமைக் கழகம் வருவதில்லை. ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றுதான் அவரை பார்க்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமி நடத்திய அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த மனு மீது விசாரணை முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது.
இந்த சூழலில் தான் ஈரோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்ததால் இரட்டை இலை சின்னம் முடங்காமல் இருப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு கோர்ட்டு அதிகாரம் அளித்து 'பி' பார்ம் விண்ணப்பத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை வழங்கியது. பொதுக்குழு உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் தென்னரசு அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசார களத்தில் உள்ளார். அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் முதலில் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரை எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு அழைக்காததால் பிரசாரத்துக்கு செல்லவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் பிரசாரத்துக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி விட்டனர்.
இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வம் தனது அடுத்த கட்ட செயல்பாடு குறித்து ஆலோசிப்பதற்காக வருகிற 20-ந்தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை, எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஓட்டலில் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டம் குறித்து செய்தி தொடர்பாளர் ஜே.சி.டி.பிரபாகரன் கூறியதாவது:- ஈரோடு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள்தான் உள்ளது. நாங்கள் முதலில் பிரசாரத்துக்கு செல்ல முடிவு செய்திருந்தோம். ஆனால் எங்களுக்கு முறையான அழைப்பு இல்லை. எனவே இந்த விசயத்தை மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய வேண்டி உள்ளது. அது மட்டுமின்றி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வர வேண்டி உள்ளதால் அது பற்றியும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் விளக்கி சொல்ல வேண்டி உள்ளது. எனவே கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிய இந்த கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. இதில் கட்சி நலன் கருதி பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.