ஆளுநரின் பிடிவாதம் - முதல்வரின் உறுதி!




தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து தமிழக அரசியல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியது. இன்று வரை அந்த சூடு தணியாமல் பார்த்துக் கொள்கிறார் ஆளுநர். பதவியேற்ற நாளிலிருந்து தமிழ் மீதும் தமிழ்நாட்டின் மீதும் பற்று வைத்து தமிழை கற்றுவருவதோடு தமிழின் தொன்மையையும், அரசியலின் அடையாளத்தையும் வெளிப்படுத்தும் அதே நேரத்தில் திராவிடத்திற்கும் திராவிட மாடலுக்கும் அவர் எதிராகவே செயல்படுகிறார் என்ற ஒரு தோற்றம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

சில நேரங்களில் ஆளுநரின் செயல்பாடுகள் சட்டத்திற்கு உட்பட்டு இருந்தாலும் அது தமிழ்நாட்டு மக்களின் தாக்குவதாகவே பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் களம் என்பது திராவிட என்ற சித்தாந்தத்திற்குள் சிக்கிக் கொண்டது என்று கூறும் பொழுது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வெறுப்புணர்வை தோற்றுவிக்கிறது. அதே நேரம் மத்திய அரசை ஒன்றிய அரசு ஆளும் கட்சியும் ஆளும் கட்சியின் தோழமை கட்சியும் தொடர்ந்து அழைத்து வருவதை பார்த்து அதற்கு மாற்று ஏற்படாக என்ன செய்யவேண்டும் என்பதற்காக ஆளுநரும் அரசியல்வாதியாக மாறிவிடுகிறார்.

தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று அழைக்கலாம் என்று கூறிவிட்டார். தமிழ்நாட்டை ஆட்சிகள் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு வேப்பங்காயக கசக்கிறது காரணம் தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள், ஆளுகிற கட்சிகள் அனைத்துமே திராவிடத்தை முன்னிலைப்படுத்தி தங்கள் செல்வாக்கை தமிழகத்தில் நிலைநிறுத்தி விட்டார்கள்.

அப்படியென்றால் தமிழகத்தில் தமிழர்கள் இல்லையா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகின்றது. திராவிட சித்தாந்தத்தை மக்கள் மனதில் திணித்த திராவிட கட்சிகள் திராவிடவும் தமிழும் ஒன்று தான் என்று அரைக் கூவல் விடுக்கின்றன. வெளிப்படையாக திராவிடர்களுக்கும், தமிழர்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் பூர்வீக தமிழர்கள் யார் என்கின்ற அடையாளத்தையும் திராவிட கட்சிகள் அடையாளப்படுத்துவதில் ஆரம்பித்து இருக்கிறார்களா? அல்லது அதை வெளிப்படுத்த மறுக்கிறார்களா என்பது தெரியவில்லை. இருந்தாலும் திராவிடத்திற்குள் தமிழா? தமிழுக்குள் திராவிடமா? என்ற தேடல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இளைஞர்களிடம்.

ஆனால் தமிழகத்தில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவும் அதன் தலைவர் அண்ணாமலையும் அவருக்கு ஏற்றாற்போல் ஆளுநர் ஆர்.என்.ரவியும் செயல்படுகிறார்கள் என்பதை அனைத்துக் கட்சிகளும் அவ்வப்பொழுது நினைவுப்படுத்தி வருகின்றன. கூடவே ஆர்.எஸ்.எஸ்.தமது சித்தாந்தத்தை புகுத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் தாமரையை மலரச் செய்வதாக செய்திகளை வெளியிடுகிறார்கள் திராவிட கட்சிகள். இதற்கு நேரடியாக மறுப்பு தெரிவிக்காத மத்திய அரசும் ஆளுநரும் தமிழக சட்டமன்றம் அனுப்புகின்ற கோப்புகளை கையெழுத்து இடாமல் காலதாமதம் செய்வதும் சிலர் குறிப்பிட்ட கோப்புகளில் கையெழுத்து இடுவதும் தொடர்வதினால் அவ்வப்பொழுது ஆளுநரும் திமுக ஆட்சிக்கு எதிராக சில கருத்துக்களை வெளிப்படுத்துவதுடன் திராவிடத்திற்கே எதிராக செயல்படுவதாக எண்ணி ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதை ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதும் திமுகவும், திமுகவின் தோழமை கட்சிகளும் மக்கள் மன்றத்தின் முன் எடுத்துவைக்கின்ற கோரிக்கையாகும்.

இந்த நிலையில் தான் ஆண்டின் தொடக்க நிகழ்வான ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவையில் நடந்த நிகழ்ச்சி. ஆளுநர் பேரவையை அவமதித்தார் என்றும் அமைச்சரவை அனுப்பிய செய்திகளை வாசிக்க மறுத்தார் என்றும் திட்டமிட்டே உள்நோக்கத்துடன் சில பெயர்களை குறிப்பிட மறுத்தார் என்றும் தேசிய கீதத்தை அவமதித்தார் என்றும் ஆளுநர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றது. அதே நேரம் சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அதன் தோழமை கட்சியின் உறுப்பினர்கள் ஆளுநரை முற்றுகையிட்டு அவமதித்தார்கள் என்றும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாஜக கட்சி சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் பிடிவாதமாக இருப்பதும் முதல்வர் தங்கள் கருத்தை உறுதியாக நின்று வலியுறுத்துவதும், தொடர்ந்து நடைபெறுவது தொடருமானால் தமிழ்நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் எந்த திசையில் செல்லும் என்பதை நினைத்து பார்க்கும் பொழுது ஆளுநரும் அரசியல் பேசுகிறார்அமைச்சர்களும் அரசியல் பேசுகிறார்கள் இதனால் பாதிக்கப்பட போவது தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தான். அவர்களுக்கு பரிகார தேட வேண்டுமே தவிர, அவர்களை சுட்டிக்காட்டுவதற்காக போராட்டம் நடத்துவது என்பது ஏற்புடையதா என்ற கேள்வி எழுகிறது. இடையில் ஆளுநரும் முதல்வரும் மௌனமாகவே இருக்கிறார்கள். தமிழ் மீதும் அக்கறை உள்ளவர்கள் இருப்பது போல் வீதிக்கு வந்து போராடுகிறார்கள் ஆளுநருக்கு எதிராக நடைபெறும் இந்த போராட்டம் ஆளும்கட்சியை பாதுகாக்க உதவுமா? அல்லது மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாகுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- பெ.த.