நாடாளுமன்றத் தேர்தலில் கை சின்னத்தில் கமலஹாசன் போட்டி…!ராகுல்காந்தியின் பாரத் ஒற்றுமை யாத்திரை, தொடர் பயணத்தில் டெல்லியில் நடைபெற்ற பொழுது அதில் நடிகர் கமலஹாசன் தன் ஆதரவாளர்களுடன் பங்கேற்றார். அதன் பின் இரண்டு நாட்கள் டெல்லியில் தங்கியிருந்து ராகுல்காந்தி அவர்களுடன் அரசியல் ஆலோசனை நடத்திய பொழுது மக்கள் நீதி மையத்தை காங்கிரஸ் கட்சியில் இணைத்து விடுங்கள் அல்லது காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்ற அளவில் ராகுல்காந்தி கமலஹாசன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட நடிகர் கமல் காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு சம்மதம் தெரிவித்ததோடு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் தனது விருப்பத்தினை ராகுல்காந்தியோடு தெரிவித்ததோடு திமுக கூட்டணியில் அதிக இடங்களை காங்கிரஸ் கேட்டு பெறவேண்டும் என்றும் தனது கருத்தினை எடுத்துக் கூறினார் நடிகர் கமல்.

ஒருவேளை கூடுதல் இடங்கள் தருவதற்கு திமுக யோசிக்கும் பொழுது என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியும் முன் வைத்தாராம் நடிகர் கமல். இதற்கு ராகுல்காந்தியின் பதில் எப்படி இருந்தாலும் நீங்கள் எங்களோடு இருங்கள். அதே நேரம் எந்த காரணம் கொண்டும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெளியேறும் எண்ணம் தற்பொழுது வரை இல்லை. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஒரு அணியை உருவாக்குவது குறித்து நாம் ஆலோசிக்கலாம். அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறிய ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை நிறைவுபெற்றப் பிறகு மீண்டும் டெல்லிக்கு வாருங்கள் அப்பொழுதும் நாம் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தலாம். அதன் மூலம் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரலாம் என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட நடிகர் கமலஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சிகளுடன் ராகுல்காந்தியின் கருத்துக்களை கலந்து ஆலோசித்தவுடன் பாஜக கட்சியின் எதிர் முகாமில் நின்று அரசியல் செய்வதற்கு முடிவு செய்துவிட்டாராம். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலஹாசன் காங்கிரஸ் கை சின்னத்தில் போட்டியிடுவார் என்பது உறுதியாய் தெரிகிறது.

- டெல்லிகுருஜி