கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: பிரதமர் மோடி- அமித்ஷாவை சந்திக்க முடிவு



சென்னை: தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 9-ந்தேதி உரை நிகழ்த்திய போது அரசு தயாரித்த சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். மேலும் சில வரிகளை கூடுதலாக சேர்த்து படித்தார். இதனால் அவருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமின்றி அச்சடிப்பட்ட உரையை அவை குறிப்பில் பதியவும் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதனால் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீது ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் புகார் தெரிவிக்க தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி, வில்சன் எம்.பி., என்.ஆர்.இளங்கோ, ஆ.ராசா ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு அனுப்பி வைத்தார். இந்த குழுவினர் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய 5 பக்க கடிதத்தை வழங்கினார்கள்.

அந்த கடிதத்தில் கடந்த 9-ந்தேதி தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் கவர்னர் உரையில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைவுரையில் இருந்த பல பகுதிகளை கவர்னர் படிக்காமல் விட்டதையும், பல புதிய கருத்துக்களை இணைத்தும் உரையாற்றியது பற்றி விளக்கப்பட்டிருந்தது. இது தமிழக சட்டமன்ற வரலாற்றின் மரபுகளை மீறிய செயல் என்பதால் அவர் வாசிக்காத பகுதிகளை அவைக் குறிப்பில் பதிவு செய்யும் விதமாக ஒரு திருத்த தீர்மானத்தை கொண்டு வந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது மட்டுமின்றி கவர்னர் ஆர்.என்.ரவி பொது வெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால் நமது மரபுகளை மீறாமல் தமிழ்நாடு மற்றும் மாநில மக்களுக்கேற்ப பணியாற்ற அறிவுறுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கடிதம் மாநிலத்தில் ஒரு இணக்கமான சுமூகமான உறவு நீடிக்க வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது. தி.மு.க. கொடுத்த புகார் கடிதத்தை ஜனாதிபதி உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கருத்து கேட்டனர்.

இந்த சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்திய போது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை பற்றியும், என்ன காரணத்தால் அரசின் உரையை முழுமையாக படிக்காமல் சில பகுதிகளை தவிர்த்தது பற்றியும் எடுத்து சொல்வதற்காக அவர் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர மேலும் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுவார் என்றும் தெரிகிறது. கவர்னர் யார் யாரையெல்லாம் சந்திக்க உள்ளார் என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.