நாளைய தேய்பிறை பஞ்சமி திதி… விரதம் இருந்து வராஹியை வழிபட்டால்….நாளை தேய்பிறை பஞ்சமி திதி. வழக்கம் போல தான். உங்கள் வீட்டில் வராஹி தாயின் திருவுருவப்படம், சிலை இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அதில் வாராஹி இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்டு, நீங்கள் உண்மையான முழு மனதோடு வழிபாடு செய்தாலே வராஹித்தாய் உங்கள் பூஜை அறையில் வந்து அமர்ந்து விடுவாள். நாளைய தினம் சிவப்பு முத்துக்கள் அழகாக இருக்கும் மாதுளம் பழத்தை உதிர்த்து வராஹி தாய்க்கும் நிவேதனமாக வையுங்கள். வெற்றிலை பாக்கு, பூ, பழம், இவைகளை சமர்ப்பணம் செய்யுங்கள். சிவப்பு நிறத்தில் இருக்கும் அரளிப்பூ அல்லது செம்பருத்தி பூ கிடைத்தால் மிகவும் சிறப்பு. இவை எல்லாவற்றையும் விட நாளைக்கு வராஹி அம்மனுக்கு தேங்காய் பூ நிவேதியமாக வைப்பது மிகச் சிறப்பான பலனை கொடுக்கும். எல்லா தேங்காயை உடைக்கும் போதும் தேங்காய் பூ நமக்கு கிடைக்காது. ஆனால் சில இடங்களில் தேங்காய் பூ தனியாக விற்கிறார்கள். அந்த தேங்காய் பூவை வாங்கி வராஹி தாய்க்கு நிவேதனமாக படைக்கலாம். ஒருவேளை உங்களுக்கு தேங்காய் பூ கிடைக்கவில்லை என்றால், தேங்காய் துருவி அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து அதை வராஹிக்கு நிவேதனமாக வைத்துவிட்டு வராஹி அம்மனின் மந்திரம் தெரிந்தால், அதை சொல்லி உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். செய்யும் தொழிலில் பிரச்சனை, எதிரி தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி, தீராத நோய், கடன் தொல்லை போன்ற அனைத்து விதமான பிரச்சனைக்கும் உடனடியாக ஒரு நல்ல தீர்வினை கொடுக்கக்கூடிய சக்தி இந்த வராஹி வழிபாட்டிற்கு உண்டு. உண்மையான வாராஹித் தாய் வழிபாடு உங்கள் தலையெழுத்தையே மாற்றி விடும்.

உங்கள் தலையில் அந்த பிரம்மன் எவ்வளவு கஷ்டங்களை எழுதி வைத்திருந்தாலும் சரி அதை புரட்டிப் போடக்கூடிய சக்தி இந்த ஒரு வழிபாட்டிற்கு உண்டு. அதிலும் நாளை தேய்பிறை பஞ்சமி திதி என்பதால் கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போக இந்த வழிபாடு செய்வது சிறப்பு. வழிபாடை முடித்துவிட்டு நிவேதனமாக வைத்த பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். உங்கள் வீட்டின் அருகில் குழந்தைகள் யாராவது இருந்தால் அவர்களுக்கும் பிரசாதத்தை கொடுப்பது சிறப்பு. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் இந்த வராஹித் தாய் வழிபாட்டை மேற்கொண்ட ஒரு சில நாட்களிலேயே யார் ரூபத்திலாவது வந்து 'நான் இருக்கிறேன் உனக்காக' என்பதை உணர்த்தி விடுவாள் அந்த சக்தி தேவி.