மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தயாரிப்பு
சென்னை: 2023-24-ம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா வருகிற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்கிறார். இதற்காக மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக நிலைக்குழு தலைவர்கள், உறுப்பினர்களிடம் பட்ஜெட் தயாரிப்பு குறித்து தனித்தனி குழுக்களாக ஆலோசித்து உள்ளனர். வருகிற 25-ந்தேதி அனைத்து குழுக்களுடனான ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது. மேலும் மண்டல குழு தலைவர்களிடம், வார்டு வாரியாக வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யவும், புதிய திட்டங்கள், தேவைகள் குறித்து விரிவான விவரங்கள் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளும், புதிய திட்டங்களும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஆலோசனையின் கீழ் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. எனவே இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை, மழைநீர், மேம்பாலம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன் மூலம் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 2022-23-ம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்பட வேண்டும். ஆனால் பொதுமக்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமையை தவிர்க்கும் வகையிலும், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டும் வரும் நிதியாண்டில் சொத்து வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.