5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி- மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்
புதுடெல்லி: உலகின் சில நாடுகளில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவல் தொடங்கி உள்ளது. இதையடுத்து இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதன் ஒருபகுதியாக பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதுபோல இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கார்பெவாக்ஸ், கோவாக்ஸ் மற்றும் கோவாக்சின் என 3 வகை தடுப்பூசிகளை குழந்தைகளுக்கும் போடலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பரவ தொடங்கியிருப்பதை கட்டுப்படுத்த இந்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்கும் போட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ பணிக்குழுவின் உறுப்பினர் டாக்டர் பிரமோத் ஜோக் கூறும்போது, இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவாமல் இருக்க இம்முறை குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது விவேகமான செயலாக இருக்கும். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பக்க நோய்களான நீரிழிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்கள் பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். உலக நாடுகளில் தற்போது பல நாடுகள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி உள்ளது. மேலும் தடுப்பூசி காரணமாக வயது முதிர்ந்தவர்களும் நோய் பரவலில் இருந்து தப்பித்து கொள்ளலாம். மேலும் பல நாடுகளில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.