3 ஆயிரம் கிலோ மீட்டரை கடந்து ராகுல்காந்தி யாத்திரை டெல்லியில் நுழைந்தது
புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, அரியானா உள்பட 10 மாநிலங்களை கடந்து 108-வது நாளான தலைநகர் டெல்லிக்குள் யாத்திரை நுழைந்தது. டெல்லி எல்லையான பதர்பூரில் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி தலைமையில் காங்கிரசார் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர். பாத யாத்திரை புறப்படும் போதே தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராகுலுடன் அணிவகுத்து பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.
யாத்திரையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும் கலந்து கொண்டனர். சோனியா முக கவசம் அணிந்து இருந்தார். இருவரும் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். ராகுல் நடைபயணத்தில் சோனியா கலந்து கொள்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கர்நாடகாவில் யாத்திரை நடந்த போது கடந்த அக்டோபர் மாதம் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர்சிங் ஹுடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரும் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றும் படியும், பின்பற்ற இயலாவிட்டால் பாத யாத்திரையை ஒத்திவைக்கும்படியும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.
இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக ராகுல் பாத யாத்திரையில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அவரை சுற்றிலும் கயிறுகளை பிடித்தபடி யாரும் அருகில் நெருங்க முடியாத படி போலீசார் அணிவகுத்து வருவார்கள். ஆனால் பாது காப்பு முறையாக செய்யாததால் காங்கிரசார் அதிருப்தி அடைந்தனர். காங்கிரஸ் தொண்டர்களே அரண் போல் நின்று யாத்திரையில் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் சென்ற பாதையின் இரு புறமும் மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தார்கள். இரவு செங்கோட்டை அருகே தங்குகிறார்கள். டெல்லியில் 9 நாட்கள் யாத்திரை நடக்கிறது. புத்தாண்டு ஓய்வுக்கு பிறகு ஜனவரி 3-ந்தேதி புறப்படுகிறது.